முருகன் கோயில்களில் தைப்பூச விழா கோலாகலம்
தைப்பூச திருவிழா இன்று முருகன் கோயில்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் குவிந்துள்ள ஆயிரகணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகுகள் குத்தியும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு தைப்பூசம் மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இதையொட்டி முருகன் கோவிலில் விரதம் இருந்து பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் பிரார்த்தனை செய்வது வழக்கம் ஆகும்.
முருகனின் 3ம் படை வீடான பழனியிலுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச விழாவையொட்டி காலையில் இருந்தே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து வந்த பக்தர்கள் காவடி ஏந்தியும், அலகுகள் குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.
தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்காக 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள நிலையில், 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முருகப்பெருமானின் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு நெல்லை, ராஜபாளையம், விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். கோயிலை ஓட்டியுள்ள கடலில் புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், காவடி தூக்கியும், அலகு குத்தியும், அங்கபிரதட்சணம் செய்தும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
முருகனின் 5ம் படை வீடான திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோயிலில் காலையில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னை வடபழனியிலுள்ள முருகன் கோவிலிலும் தைப்பூச விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அக்கோயிலில் அதிகாலை 4 மணி முதலே குவிந்த பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதேபோல் பழமுதிர்சோலை முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் காலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலில் இன்று காலை தைபூச தேரோட்டம் நடைபெற்றது. கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்டதாக சொல்லப்படும் சென்னிமலை முருகன் கோவில் தைபூச திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமர்சையாக நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் இருந்த வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமியை பக்தர்கள் தோளில் சுமந்தபடி தேருக்கு சுமந்து வந்தனர். பின்னர் முருகனின் புகழ்பாடும் முழக்கங்களை எழுப்பி தேரின் வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முருகப்பெருமானின் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலை முதலே ஆயிரகணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் தரிசனம் செய்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் விரதமிருந்து, பாத யாத்திரையாக வந்தும், உடலில் அலகு குத்தியும், பறக்கும் காவடியில் அலகு குத்தி தொங்கியபடியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேவுள்ள 6ம் படை வீடான பழமுதிர்சோலை முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு அபிசேகமும், பூஜையும் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று, பால்குடம் எடுத்தும், மொட்டை அடித்தும் வழிபாடு நடத்தினர்.
மலேசியா நாட்டில் வாழும் தமிழர்களாலும் தைப்பூச விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் கோலாலம்பூர் அருகே பத்துமலையில் உள்ள குகைக்கோயிலான பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் உடலில் அழகு குத்தியும், பிரமாண்ட காவடி, பால்குடம் உள்ளிட்டவற்றை எடுத்து வந்தும் பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு நடத்தினர்.
முருகபெருமானின் 4ம் படை வீடான தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் தைப்பூசத்தையொட்டி சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மேலும் வள்ளி-தெய்வானையுடன் சுவாமி திருவீதி உலாவும், நண்பகலில் காவிரி கரையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிசேகங்களுடன் தீர்த்தவாரியும் நடைபெற்றது. தைப்பூசத்தையொட்டி கோயிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Comments