கொரோனாவால் முடங்கிய சீனாவின் தற்போதைய நிலை என்ன..?
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது அந்நாட்டில் நிலவி வரும் சூழல் மற்றும் பொருளாதார நிலை பற்றி பார்க்கலாம்.
சென்னையை விட பெரியது:
கொரோனா வைரஸ் சீனாவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.கொரோனாவின் மையமான ஹூபே மாகாணத்தின் தலைநகரமான வூகான் நகரம், தமிழக தலைநகர் சென்னையை விட பெரிய நகரம். கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் வூகான் நகரை விட்டு இப்போது யாரும் வெளியே வரவோ அல்லது உள்ளே செல்லவோ முடியாத நிலை உள்ளது.
போக்குவரத்து தடை:
அதே போல ஹூபே மாகாணம் முழுவதையும் வெளி போக்குவரத்து இல்லாமல் சீன அரசு தடை செய்து வைத்துள்ளது. இதனால் சுமார் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் ஹூபேவை விட்டு வெளியேற முடியாத சூழலில் உள்ளார்கள். ஆனால் சீன அரசு இந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க துவங்கும் முன்பே, வூகான் நகரை விட்டு அண்டை மாநிலங்களுக்கு பயணம் செய்தவர்களால் தான் சீனாவில் கொரோனா பரவ துவங்கியது.
சார்ஸ் மற்றும் மெர்ஸ்:
கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்துள்ளவர்களில் 99 சதவீதம் பேர் சீனர்கள். தற்போது கொரோனாவால் சீனாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பை, கடந்த 2003-ம் ஆண்டு அந்நாட்டில் பரவிய சார்ஸ் வைரஸுடன் ஒப்பிடலாம். அப்போது சுமார் 800-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதில் ஹாங்காங்கில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது சார்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் உயிரிழந்தார்கள். அதே போல கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மெர்ஸ் என்ற வைரஸ் பாதிப்பு வந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் உயிரிழந்தனர்.
அதிக பாதிப்பு:
இவற்றோடு ஒப்பிடும் போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 2 சதவீதம் பேர் வரை தான் மரணமடைவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. மரணமடையும் விகிதம் குறைவாக இருந்தாலும் பாதிப்பின் வீச்சு அதிகமாக இருக்கிறது. ஒருவரிடமிருந்து 3 பேருக்கு பரவும் வேகமாக தன்மையை கொண்டிருக்கிறது கொரோனா.
சரிவில் சீன பொருளாதாரம்:
கொரோனாவால் சீன பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக குறையும் என வல்லுநர்கள் கூறியுள்ளார். உலகினுடைய முக்கிய தொழிற்சாலையாக உள்ள சீனா, பொருளாதார ரீதியாக இயங்கி கொண்டே இருக்க வேண்டும். ஆனால் தற்போது மக்களின் உயிரை காக்கும் முயற்சியில் சீன அரசு கவனம் செலுத்தி வருகிறது.
அதுவும் சீன புத்தாண்டு துவங்கிய நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மிக அதிக மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் பயணம் என்பதும் தடைபட்டுள்ளது. ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.அதே போல சுற்றுலா வர்த்தகம் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
Comments