5 லட்சம் இந்தியர்களின் கிரடிட், டெபிட் கார்டு விபரங்கள் இணையத்தில் விற்பனை
சுமார் 5 லட்சம் இந்தியர்களின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பற்றிய விபரங்கள் இணையத்தில் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டார்க் வெப் எனப்படும் அனாமதேய இணையத்தில் இந்தியர்கள் பயன்படுத்தும் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள், அவற்றின் ரகசியக் எண்கள் உள்ளிட்ட விபரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூரைச் சேர்ந்த இணையபாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் சுமார் 5 லட்சம் இந்தியர்களின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டு பற்றிய விபரங்கள் வெளியாகி வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகள் மூலமாகவே இந்த விபரங்கள் கசிந்துள்ளதாகக் கூறும் அந்த நிறுவனம், ஒவ்வொரு அட்டையைப் பற்றிய முழு விபரங்களும் இந்திய மதிப்பில் 700 ரூபாய்க்கும் குறைவாகக் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அட்டைகளின் விபரங்களுடன் அதனைப் பயன்படுத்துவோரின் மின்னஞ்சல் முகவரிகள் கூட வெளியாகி உள்ளதாகவும், சிங்கப்பூர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கடந்த ஆண்டு அறிக்கையின்படி, கிரடிட், டெபிட் கார்டுகள் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் வழியாக கடந்த ஆண்டு ஆயிரத்து 866 மோசடிகள் நடந்துள்ளதாகவும், இதன் மூலம் சராசரியாக 20 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் விபரங்கள் வெளியானது குறித்து ரிசர்வ் வங்கியின் இணைய பாதுகாப்புத்துறை விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தத் தகவல்கள் எப்படித் திருடப்பட்டன என்று தங்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இ காமர்ஸ் முறையைப் பயன்படுத்துபவர்களிடம் இருந்து ஹேக்கர்கள் மூலம் திருட வாய்ப்பிருக்கலாம் என்று ஐயம் எழுப்பியுள்ளனர்.
மற்ற இணையதளங்களைப் போல் அல்லாமல் டார்க் வெப் எனப்படும் அனாமதேய இணையத்தில் குற்றவாளிகளைத் தேடுவது என்பது இயலாத காரியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments