ஜப்பான் கப்பலில் 6 இந்தியருக்கு கொரோனா வைரஸ்
கொரோனா வைரசுக்கு சீனாவில் ஒரே நாளில் 81 பேர் பலியான நிலையில், மொத்தமாக இதுவரை 724 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் அலங்கு என்ற விலங்கில் இருந்து வந்திருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஜப்பான் கப்பலில் இருந்த 6 இந்தியர்களுக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கடந்த மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்குதலுக்கு இதுவரை 717 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 25 நாடுகளில் பரவியுள்ள இந்த நோயின் காரணமாக 34 ஆயிரத்து 394 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத கொரோனா வைரஸ் பரவலுக்கு இதுவரை பாம்புகள் மற்றும் வவ்வால்கள் மட்டும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் அலங்கு எனப்படும் எறும்புதின்னி விலங்கிடமிருந்து பரவியிருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனர்களின் உணவில் இடம் பிடித்துள்ள அலங்குவின் செதில்கள் கலைப் பொருட்கள் செய்வதற்காகவும், மருத்துவ குணம் கொண்டது என்ற மூடநம்பிக்கையின் பேரிலும் அதனை அதிகம் வாங்கிச் செல்வது அவர்களின் வழக்கம்.
தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் அலங்குவின் உடலில் உள்ள கிருமிகள் கொரோனா வைரசுடன் 99 விழுக்காடு ஒத்துப் போவதாகவும் தென் சீனப்பகுதியில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சீனாவுக்கு சென்றுவிட்டு வந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலை ஜப்பான் தனது பகுதிக்குள் அனுமதிக்காததால், கப்பலில் மொத்தம் 3 ஆயிரத்து 711 பேர் யோகோஹாமா கடற்பகுதியில் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 6 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் வேல்ர்ட் ட்ரீம் என்ற சொகுசுக் கப்பலில் வந்த 8 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதனிடையே சீனாவில் இருந்து வரும் பயணிகள் தங்கள் நாட்டுக்குள் வருவதற்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. தனது குடிமக்களுக்கு சீனாவுக்குச் செல்ல தடைவிதித்துள்ளதுடன், தடையை மீறிய யாரேனும் அதிகாரிகளிடம் சிக்கினால், அவர்களின் பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்யப்படும் என்று சவூதி அரேபியாவின் குடியுரிமைத் துறை எச்சரித்துள்ளது. சீனப் பயணிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்காத 16 வது நாடாக சவுதி உள்ளது.
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கும், அதனால் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், தனது அறக்கட்டளை சார்பில் இந்திய மதிப்பில் 700 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ள நிலையில் அமெரிக்க அரசும் அதே அளவு பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments