விஏஒ தேர்விலும் முறைகேடு..!

0 706

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அதிகாரி தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றவரை கைது செய்துள்ள சிபிசிஐடி, இடைத்தரகர் ஜெயக்குமாரை 7 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருவதாக அறிவித்துள்ளது. 

குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் மொத்தம் 32 நபர்கள் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டம் வடமருதூர் மேட்டுக்காலணி கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் 2016ல் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்று பணிபுரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனக்கு மூன்றரை லட்சம் ரூபாய், தனக்கு தெரிந்த 5 நபர்களுக்கு மொத்தம் 34 லட்சம் ரூபாயை காவலர் பூபதி மூலம் முக்கிய குற்றவாளியான ஜெயகுமாரிடம் கொடுத்து முறைகேடு செய்து தன்னையும் சேர்த்து 6 நபர்களை அவர் தேர்ச்சி பெற வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து சிபிசிஐடி புதிய வழக்கை பதிவு செய்துள்ளது.

மேலும் 2017ல் நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வில் நாராயணன் கூட்டாக சேர்ந்து அவருடைய மனைவி மகாலட்சுமியையும் சேர்த்து 7 தேர்வர்களிடம் இருந்து மொத்தம் 73 லட்சம் ரூபாயை முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரிடம் கொடுத்து முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் மகாலட்சுமி மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பில் நிராகரிக்கப்பட்டு, மற்ற 6 தேர்வர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த இரு வழக்குகளிலும் நாராயணன் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. 

இதனிடையே சரணடைந்த முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 10 நாட்கள் அவரை காவலில் எடுக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது தன்னை போலீஸ் காவலுக்கு அனுப்ப வேண்டாம் என்று கூறி ஜெயக்குமார் கண்ணீர் விட்டு கதறினார். எனினும் , 7 நாள் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, ஜெயக்குமாரிடம் விசாரித்து வருவதாக சிபிசிஐடி அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments