நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் ஏற்ற புதிய தேதி அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி
நிர்பயா வழக்கு கைதிகளை தூக்கில் ஏற்ற புதிய தேதியை நிச்சயிக்க கோரி, திகார் சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை, வெள்ளி அன்று டெல்லி விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
நிர்பயா மரண தண்டனை கைதிகளை தூக்கில் ஏற்றுவதற்கு தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்றம், அவர்கள் தங்களது சட்டபூர்வ நிவாரணங்களை தேடிக்கொள்ள 7 நாள் கெடு விதித்து கடந்த புதன் அன்று உத்தரவிட்டது. அதற்குள் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்றால், சட்டபூர்வ நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தூக்குத் தண்டனைக்காக புதிய தேதியை அறிவிக்குமாறு விசரணை நீதிமன்றத்தில் திகார் நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.
குற்றவாளி பவன் குப்தாவின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் 2018 ல் தள்ளுபடி செய்த பிறகு அவன் இதுவரை எந்த சட்ட நிவாரணமும் தேடவில்லை என்று ம் திகார் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார். இனி அவன் சார்பில் வேறு மனு எதுவும் தாக்கலாக வாய்ப்பில்லை என்று திகார் தரப்பு வழக்கறிஞர் கூறியதை ஏற்க மறுத்த நீதிபதி, ஊகங்கள் அல்லது அனுமானத்தின் அடிப்படையில் மரண தண்டனைக்கான வாரண்டுகளை பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
டெல்லி உயர் நீதிமன்றம் விதித்த கெடு இன்னும் இருப்பதாக கூறிய நீதிபதி,சட்டம் அவர்களுக்கு உயிரோடு இருக்கும் அனுமதியை அளிக்கும் போது தண்டனையை நிறைவேற்றுவது கிரிமினல் பாவம் என்று கூறி திகார் நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.
Comments