ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ வரை செல்லும் TATA Altroz எலக்ட்ரிக் கார்.! எப்போது அறிமுகம்?
விரைவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ள TATA Altroz பிரீமியம் ஹேட்ச்பேக்கின் எலக்ட்ரிக் வேரியன்ட்டை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ ஒன்றில் காட்சிப்படுத்தியுள்ளது.
எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக உள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். Altroz மாடலில் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டர்போ டீசல் இன்ஜின் மாடல்கள் விற்பனையில் உள்ளன. Altroz மாடலுக்கு விரைவில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இஞ்சின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரிக் வேரியன்ட்:
இந்நிலையில் தான் Altroz மாடலில் எலக்ட்ரிக் வேரியன்ட்டை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த எலக்ட்ரிக் காரில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Nexon EV காரில் பயன்பாட்டில் உள்ள lithium ion battery-யே கொடுக்கப்பட்டுள்ளது. TATA Altroz-ன் எலக்ட்ரிக் வேரியன்ட் காருக்கான விலை பட்டியலை டாடா நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. அதே போல இந்த எலக்ட்ரிக் மாடல் காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என்ற தகவலையும் டாடா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.
மைலேஜ் எவ்வளவு?
எனினும் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் விலை விற்பனைக்கு வரும் போது ரூ .12 லட்சத்திலிருந்து ரூ.14 லட்சம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல சமீபத்தில் விற்பனைக்கு வந்த Tata Nexon EV காரின் செயல்திறனை பார்க்கும் போது, Altroz எலக்ட்ரிக் காரானது ஒரு முறை சார்ஜ் செய்தால், 250 முதல் 300 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் அதிக எடை கொண்ட Tata Nexon EVஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கிறது. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள lithium ion battery தான், Altroz EV-யிலும் பயன்படுத்தப்பட உள்ளது என்பதை கருத்தில் கொண்டு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாப் ஸ்பீட்:
அதே போல Altroz EV கார் 10 வினாடிகளுக்குள், ஜீரோவிலிருந்து 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை எட்டி விடும் திறன் படைத்ததாக இருக்க கூடும். போட்டியாளர்களின் விலையை கருத்தில் கொண்டு, குறைந்த விலையை நிர்ணயிக்கும் வகையில் இந்த காரின் அதிகபட்ச வேகம் 140 கிலோ மீட்டராக இருக்கலாம்.
இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மின்சார கார்களிலும் பெரும்பாலும் Automatic Transmission வசதி உள்ளது. எனவே Altroz EV காரும் Automatic Transmission வசதியை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வசதி வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தொந்தரவில்லாத செயலாக மாற்றும் என்பது நிபுணர்களின் கருத்து.
Comments