முறைகேடுகளை தடுக்க TNPSC தேர்வு முறையில் 6 முக்கிய மாற்றங்கள்

0 5429

தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க தேர்வு முறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட சில தேர்வுகளில் விரும்பத் தகாத முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வு நடைமுறைகள் நிறைவடைந்த பின் தேர்வு பெற்றவர்கள் விவரம் முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக 2019 தொகுதி 1 தேர்வில் தேர்ச்சி அடைந்த 181 பேரின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்வு நடைமுறைகள் நிறைவடைந்த பின் தேர்வர்கள் விடைத்தாள் நகல்களை இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தி பெற ஏப்ரல் 1 முதல் அனுமதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இணையதள விண்ணப்பத்தில் தேர்வு மைய விருப்பமாக 3 மாவட்டங்களை தேர்வு செய்ய தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும்  மையத்தை தேர்வாணையமே ஒதுக்கீடு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒருவர் ஒன்றுக்கு மேல் விண்ணப்பங்கள் பதிவு செய்வதை தடுக்க ஆதார் கட்டாயம் என்றும், தேர்வர்களின் விரல் ரேகையை ஆதார் தகவலுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பின்னரே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முடிவுகளை வெளியிடும் முன் முறைகேடுகளை அறிந்து தடுக்கும் வகையில் உயர் தொழில்நுட்பத் தீர்வு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments