டிஎன்பிஎஸ்சி முறைகேடு : அமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி ?

0 1318

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முறைகேடு புகாரில் சிக்கிய மனிதநேயம், அப்பலோ பயிற்சி மையஙகள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், குருப் 1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரிக்கத் தொடங்கிய போது, மலையளவு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மத்தியக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த விசாரணை அதிகாரி செங்குட்டுவன், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், மனித நேயம் மற்றும் அப்போலோ பயிற்சி மைய இயக்குநர் சாம் ராஜேஸ்வரன் பல முறைகேடுகள் செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கேள்வித் தாள்களை தயாரித்தல், விடைத்தாள்களை திருத்துதல் பணியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்களுடனும் தேர்வாணைய ஊழியர்கள் சிலருடனும் சேர்ந்து சாம் ராஜேஸ்வரன் பல முறைகேடுகள் செய்திருப்பது, அவர்கள் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததிலிருந்து தெரியவந்துள்ளது என்று போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சாம் ராஜேஸ்வரனின் அப்போலோ பயிற்சி மையத்தில் 2018இல் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை செய்து, பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

எனவே மனிதநேயம், அப்போலோ பயிற்சி மையங்களை நோக்கி விசாரணை செல்வதை விரும்பாத மேலிடம், முறையாக விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் குழுவைக் கலைத்து விட்டு, இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனை மாற்றி விட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

2019 ஜூன் மாதம் விசாரணை அதிகாரியான உதவி ஆணையர் சுந்தரவதனன் தாக்கல் செய்த அறிக்கையிலும், குரூப் 1 தேர்வின் 3 விடைத்தாள்கள், ஒரே ஆளின் கையெழுத்தில் உள்ளது, வெற்றி பெற்ற 65 பேர் ஒரே மையத்தில் படித்துள்ளார்கள் என்று குறிப்பிட்டிருந்ததாகவும், இதனால் உடனடியாக உதவி ஆணையர் சுந்தரவதனன் மாற்றப்பட்டதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

விருப்பு வெறுப்பின்றி நியாயமாகவும் முழுமையாகவும் மனிதநேயம், அப்போலோ பயிற்சி நிறுவனங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் தான் என பேட்டியளிக்கும் அமைச்சர் ஜெயக்குமார், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர முன்வருவாரா ? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments