பேரறிவாளன் கருணை மனு மீது தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் -மத்திய அரசு

0 1279

பேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் சுதந்திரமாகவும், சட்டப்படியும் முடிவெடுக்கலாம் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பியது.

அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தன்னை விடுதலை செய்யமால் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் நளினி ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் முகமது நஸிம்கான் தாக்கல் செய்த பதில் மனுவில், பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தை நிராகரித்து மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பேரறிவாளன், தமிழக ஆளுநரிடம் அளித்த கருணை மனு நிலுவையில் உள்ளதாகவும், அதில் சுதந்திரமாகவும் சட்டப்படியும் முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்ற நளினியின் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசின் பதில் மனுவில்  கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, நளினி மற்றும் அரசு தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணை பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments