பவானி ஆற்றின் குறுக்கே கதவணைகள் கட்ட கோரிக்கை..!
ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு பதிலாக கதவணைகளை அமைத்து தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பாயும் பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி அணை, காலிங்கராயன் தடுப்பணை ஏற்கனவே கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆற்றின் குறுக்கே மேலும் சில தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு, ஜம்பையில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகள் நடைபெற்றது. இதில் நீர் மட்டத்தின் அளவீடு, கரைப்பகுதி உள்ளிட்டவைகளை அளவீடு செய்தனர்.
இந்நிலையில் பவானி ஆற்றின் குறுக்கே ஜம்பை- சிறை மீட்டான் பகுதி தடுப்பணை, ஆப்பக்கூடல்- பெருந்தலையூர் பகுதி, அத்தாணி- சவண்டப்பூர் பகுதி, கள்ளிப்பட்டி- நஞ்சை கோபி பகுதி, வாணிபுதூர்- போடி சின்னானூர் கரை காசிபாளையம் பகுதி தடுப்பணை, சிவியார்பாளையம்- அரசூர் இணைப்புப் பகுதி, கோப்பு பள்ளம்-கோண மூலை இணைப்புப் பகுதி, பகுத்தம்பாளையம்- ராமாபுரம் இணைப்புப் பகுதி உள்ளிட்ட 8 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என்றும், இந்த தடுப்பணைகளை கதவணைகளாக மாற்றி தர வேண்டும் எனவும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இந்த தடுப்பணைகள் கட்டும் பட்சத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் கதவணை நீர் தேக்கத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வறட்சி காலங்களில் கூட தொடர்ந்து விவசாயம் செய்யும் நிலை உருவாகும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தங்கள் கோரிக்கையை பரிசீலித்து தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments