விமானத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று தீவிரமாக பரவுமா?
விமானத்தில் கொரானா வைரஸ், ஒரு பயணியிடமிருந்து சக பயணிகளுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் நிலவும் நிலையில், அதிலிருந்து, எளிதாக தப்புவதற்கான வழிமுறைகளை, சர்வதேச விமானப்போக்குவரத்து கழக ஆஸ்தான மருத்துவரான டேவிட் போவல் கூறியிருக்கிறார்.
கொரானா வைரஸ் பாதிப்பையடுத்து சீனாவுக்கு பல்வேறு நாடுகள் விமான சேவையை ரத்து செய்துள்ளன. விமானத்திலேயே கொரானா இதர பயணிகளுக்குப் பரவக்கூடும் என்றும் அச்சம் எழுந்துள்ளது.
இது குறித்துப் பேசிய சர்வதேச விமானப்போக்குவரத்து கழக மருத்துவர் டேவிட் போவல், கொரானா வைரஸ் விமானத்தின் இருக்கையிலும் கைப்பிடிகளிலும் நீண்ட காலம் நீடிக்காது என சுட்டிக்காட்டியுள்ளார். பயணிகளிடையே உடல் ரீதியான நெருக்கம் மட்டும்தான் பேராபத்தாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திரையரங்கு போலவோ, அலுவலகம் போலவோ அல்லாமல் விமானத்தின் உள்ளே காற்று சுத்திகரிக்கப்பட்டதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மறுசுழற்சி முறையில் காற்று வெளியேற்றப்பட்டு புதிய காற்று உள்ளே நுழைவதால் விமானத்தில் நோய் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் டேவிட் போவல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உடல் நலமின்றி இருப்பவர்களுக்கு முககவசம் அணிவிப்பது ஓரளவு பலன் தரக்கூடியது. ஆனால் நீண்ட நேரம் முககவசம் அணிவதால் அதன் ஈரத்தில் வைரஸ் தொற்றுகள் அதிகரித்து அக்கம் பக்கம் பெருகும் என்றும் மருத்துவர் எச்சரித்துள்ளார்.
இதே போன்று கையுறைகள் அணிவதாலும் பெரியளவில் பலன் கிடைக்காது என்றும் கூறியுள்ளார். விமானத்தில் உள்ள பொருட்களைத் தொடுவதை விட பாதிக்கப்பட்ட நபர்களைத் தொடுவதுதான் ஆபத்தானதாக இருக்கும் என்பது மருத்துவரின் விளக்கமாகும்.
Comments