கொரோனா பற்றி எச்சரித்த மருத்துவர் மரணம்..!

0 4310

கொரோனா நோய் குறித்து முதல் நபராக எச்சரிக்கை விடுத்த சீன மருத்துவர் அதே நோயால் உயிரிழந்தார். சீனாவில், கொரோனா ரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. 

சீனாவில் கொரோனா வைரஸ் பற்றி முதன்முதலாக எச்சரித்த டாக்டர் அந்த நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக ஹூவான் மருத்துவமனை அறிவித்துள்ளது. அவர் உயிருடன் இருப்பதாக வெளியிடப்பட்ட செய்திகள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டன.

சீனாவின் அரசு இதழான குளோபல் டைம்ஸ் என்ற பத்திரிகையில் மருத்துவர் லீ வென்லியாங் (Li wenliang) இறந்து விட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் மருத்துவர் நோயால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அவர் இதயத்துடிப்பு நின்று விட்டதாகவும் உயிரை மீட்க மருத்துவர்கள் முயற்சிப்பதாகவும் 34 வயதான மருத்துவர் குறித்து முன்னுக்குப் பின் முரணாக செய்திகள் வெளியாயின. புதிய வகை நிமோனியா போன்ற வைரஸ் பரவி வருவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் முதன் முதல் எச்சரித்ததற்காக இந்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

தற்போது அவருடைய மரணச் செய்தியில் மாறுபட்ட தகவல்கள் வெளியானதில் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராக கருத்துகள் பதிவிடப்பட்டன. மருத்துவரின் உண்மையான நிலவரத்தை வெளியிடுமாறு அரசைக் கண்டித்து பதிவுகள் பெருகின.

இந்நிலையில் வூகான் மருத்துவமனை இறுதியாக வெளியிட்ட அறிக்கையில் சீன உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.58 மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவர் லீ இறந்துவிட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே சீனாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.

பில்கேட்ஸ், மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை சீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பை போக்க 100 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது. மருந்தே இல்லாத இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க இந்த நிதி உதவும் என்று அந்த அறக்கட்டளை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா வைரசை கட்டுப்படுத்தக் கூடிய இரண்டு மருந்துகளுக்கு சீனாவின் பரிசோதனைக் கூடம் உரிமை கோரியுள்ளது. remdesivir மற்றும் chloroquine ஆகிய இரு மருந்துகளும் பரிசோதனையில் நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டிருப்பதாக சீனா வூகான் இன்ஸ்டிட்யூட் ஆப் விரோலாஜி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments