காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் : வைகோவின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலடி....
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நாள் கருப்பு தினம் என்று கூறிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பதிலடி கொடுத்துள்ள பிரதமர் மோடி அன்றைய தினம் தீவிரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் ஊக்குவிப்போருக்கு தான் கருப்பு தினம் என்று, கடுமையாக சாடியுள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது நேற்று மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது குறித்து பேசினார்.
காஷ்மீர் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் காரணத்தையும் அவர் விளக்கினார். ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு கருப்பு தினம் என்று வைகோ ஜி கூறியுள்ளார் என்றார். ஆனால் அன்றைய தினம் தீவிரவாதிகளைத் தூண்டியவர்களுக்கும், பிரிவினைவாதிகளுக்கும்தான் கருப்பு தினம் என்று பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.
காஷ்மீரில் இனி ஒருவரும் தேசியக் கொடியை ஏந்த மாட்டார்கள் என்று பேசிய பரூக் அப்துல்லாவையும், காஷ்மீரை பிரிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்படும் என்று கூறிய மெஹ்பூபா முப்தியையும் , பிரிவினைக்கு ஆதரவாக பேசிய உமர் அப்துல்லாவையும் மோடி விமர்சித்தார். சட்டப்பிரிவை நீக்கினால் காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்படும் என்று உமர் அப்துல்லா கூறியதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்திய அரசியலைப்பு சட்டத்தின் மீது மரியாதையே இல்லாத இந்த தலைவர்கள் சிறையில் இருப்பதற்காகவா? இத்தனை ஆர்ப்பாட்டம் என்று எதிர்க்கட்சியினருக்கு மோடி கேள்வி எழுப்பினார். ஜம்மு காஷ்மீர் குறித்த முடிவுகள், எந்தவித விவாதமும் ஆலோசனையும் இல்லாமல் எடுக்கப்பட்டதாக சாடிய காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத்துக்கும் பதிலளித்த பிரதமர் மோடி, அரசு எடுத்த முடிவுக்கு எம்பிக்கள் ஆதரவளித்ததை சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றதாகவும் மோடி தெரிவித்தார். தெலுங்கானா தனிமாநிலமாக்கப்பட்ட போது மூடிய கதவுகளில் நடைபெற்ற ஆலோசனைகள் , லைவ் ஒளிபரப்புக்குத் தடை போன்றவற்றை காங்கிரஸ் அரசு செய்ததையும் அவர் குலாம் நபி ஆசாத்துக்கு நினைவூட்டினார். முதன்முறையாக பல தசாப்தங்களுக்குப் பிறகு காஷ்மீர் மக்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்கள் கிடைத்திருப்பதையும் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார்.
Comments