தமிழகத்திற்கு தொழிற்சாலையை மாற்ற கியா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டம்?
கியா மோட்டார்ஸ் நிறுவனம், ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையை தமிழ்நாட்டிற்கு மாற்றுவது தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் 5ஆவது பெரிய கார் சந்தையான இந்தியாவில், தனது முதல் தொழிற்சாலையை கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆந்திரப்பிரதேசத்தின் அனந்தபூரில் கடந்த டிசம்பரில் திறந்தது. 2 ஆண்டுகள் கட்டுமானப் பணிக்குப் பிறகு திறக்கப்பட்ட இந்த தொழிற்சாலை, ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் தயாரிக்கும் திறன் பெற்றது.
12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை ஆந்திரத்தில் உருவாக்கியுள்ளது. இந்நிலையில், தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் எனும் ஆந்திர அரசின் சட்டமும், தொழில்-வணிக நிறுவனங்களுக்கு சந்திரபாபு நாயுடு அரசு வழங்கிய சலுகைகளை மறுபரிசீலனை செய்யும் ஜெகன்மோகன்ரெட்டி அரசின் திட்டமும் கியா நிறுவனத்தின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் வாகன உதிரிபாகங்களின் உற்பத்தி மையமாக திகழும் தமிழகத்திற்கு தொழிற்சாலையை மாற்றுவது குறித்து கியா மோட்டார்ஸ் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழிற்சாலையை மாற்றுவதன் மூலம், வாகன உதிரிபாகங்களுக்கான சரக்கு போக்குவரத்து செலவு கணிசமாகக் குறையும் என்றும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் கருதுவதாக சொல்லப்படுகிறது.
ஆந்திரப்பிரதேசத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் கியா மோட்டார்ஸ் நிறுவனம், முதல்நிலை பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும், அடுத்த வாரத்தில் தமிழக அரசு செயலர்கள் நிலையிலான சந்திப்புக்குப் பிறகு முழுவிவரம் தெரியவரும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறியதாக ராய்ட்ட்ர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், தற்போதுள்ள இடத்தில் இருந்து தொழிற்சாலையை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என கியா மோட்டார்ஸ் கூறியுள்ளது. ஆனால், ஆந்திரபிரதேச அரசின் கொள்கைகளால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தோ தமிழக அரசுடன் பேச்சு நடத்துவதாகக் கூறுவது பற்றியோ கியா மோட்டார்ஸ் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
Comments