சபரிமலை கோவில் நிர்வாகத்திற்காக தனிச் சட்டம்..!
சபரிமலை கோவில் நிர்வாகம் தொடர்பான புதிய சட்டத்தை விரைவில் கொண்டு வர இருப்பதாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிரான மனுக்களை ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில் கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா சபரிமலை கோவில் நிர்வாகம் தொடர்பாக புதிய சட்டம் கொண்டு வர இருப்பதால் பதிலை தாக்கல் செய்ய 4 வாரங்களுக்கு கூடுதல் அவகாசம் கோரினார்.
இதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் கோவில் நிர்வாகத்தை கையகப்படுத்த தனிச்சட்டம் இயற்ற உள்ளதாக கேரள அரசு உச்சநீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
நவம்பரில் நடைபெற்ற விசாரணையின் போது, அரசு எந்த நடவடிக்கையும் ஏன் இதுவரை எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. திருவிதாங்கூர் கொச்சின் இந்து சமய நிறுவனச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டு வருமாறும் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து கேரள அரசு நேற்று புதிய சட்டத்திற்காக அவகாசம் கோரியது.
ஆயினும் சபரிமலை கோவிலில், சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்களை, கேரள அரசே முன்வந்து எடுத்து, பிரத்யேகமாக பராமரிக்க வாய்ப்பும், வசதியும் இருக்கிறதா? அல்லது இல்லையா? எனக் கேள்வி எழுப்பியிருக்கும் உச்சநீதிமன்றம், இதுகுறித்து உரிய பதிலளிக்குமாறும், உத்தரவிட்டிருக்கிறது.
மேலும், சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் கடவுளுக்குச் சொந்தமானவை என்றால், அதனை, பந்தள மன்னரின் குடும்ப வாரிசுகள் எப்படி சொந்தம் கொண்டாட இயலும் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
Comments