பெரியகோவில், மருந்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று குடமுழுக்கு விழா
தஞ்சை பெரியகோவில், சென்னை மருந்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற்றது. அனைத்து விமானம் மற்றும் ராஜ கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு வேத பண்டிதர்கள், சிவாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்கள் மந்திரங்கள் முழங்க தமிழ் மற்றும் சமஸ்கிருத முறைப்படி புனிதநீர் ஊற்றப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள உமைய பார்வதி சமேத மூலநாதர் ஸ்வாமிகள் சன்னிதியில் குடமுழுக்கு விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. மூலநாத சுவாமி விமானம் மற்றும் பரிவார மூர்த்தி சன்னதி விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி பொது தீட்சிதர்களால் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூரில், ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படும் ஆரணவல்லி அம்பாள் ஸமேத பூதகிரீஸ்வரர் ஆலயத்திலும் குடமுழுக்கு நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சிறு குறிப்புத்தொண்டர் முக்தி பெற்ற தலமாகிய முத்தீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்ட இக்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
கோவை உக்கடம் பகுதியில் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேவுள்ள கட்டிக்குளம் ராமலிங்கசுவாமி கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்புரீஸ்வர் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
Comments