குரூப் 2ஏ தேர்வு முறைகேடு...மேலும் 3 பேர் சிறையில் அடைப்பு..!
குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக முக்கிய குற்றவாளியாக கருதப்படும் காவலர் சித்தாண்டியோடு மேலும் ஒரு காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
2017ம் ஆண்டு நடைபெற்ற குரூப்2ஏ தேர்வில் 16 பேரும், குரூப் 4 தேர்வில் 16 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக மொத்தம் 32 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், காவலர் சித்தாண்டி போலீசாரிடம் பிடிபட்ட நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள வணிகவரி அலுவலகத்தில் பணியாற்றி வரும் கார்த்திக் மற்றும் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் பூபதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சித்தாண்டி குரூப் 2ஏ தேர்வில் 7 தேர்வர்களிடம் மொத்தம் 82 லட்சத்து ஐம்பதாயிரம் வரை பணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட உதவியதுடன், 2019ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்விலும், 15 தேர்வர்களிடம் தலா 7 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வசூலித்து முக்கிய குற்றவாளி ஜெயகுமாரிடம் கொடுத்தது தெரியவந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி கடந்த 2013ஆம் ஆண்டு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்துள்ளார். 2015ல் சென்னை வந்தவர், டி.என்.பி.எஸ்.சியில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கு கார் ஓட்டுநராகப் பணியாற்றியுள்ளார். தற்போது தலைமறைவாகவுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார், அங்கு வைத்துதான் சித்தாண்டிக்குப் பழக்கமாகியுள்ளான்.
அவன் மூலம் தனது மனைவி, சகோதரர் உள்ளிட்ட பலருக்கு அரசு வேலை வாங்கித் தந்த சித்தாண்டி, அதன்பிறகு தன்னை அணுகுபவர்களுக்கும் ஜெயக்குமார் மூலம் கமிஷன் அடிப்படையில் வேலை வாங்கிக் கொடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். சித்தாண்டிக்கும் ஜெயக்குமாருக்கும் இடையில் விழுப்புரம் மாவட்டம் அரியூர் வி.ஏ.ஓ நாராயணன் என்பவர் பணப்பரிமாற்றத்துக்கு உதவியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு காவலரான பூபதி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறைச் சேர்ந்தவர். சென்னை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பூபதி குரூப் 2ஏ தேர்வில் 5 தேர்வர்களிடம் இருந்து ரூபாய் 55 லட்சம் வரை பணம் பெற்று அதே நாராயணன் மூலம் கொடுத்ததாக போலீஸார் கூறுகின்றனர்.
மூன்றாவதாக கைது செய்யப்பட்டுள்ள வணிகவரித்துறை அலுவலக உதவியாளர் கார்த்திக், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்தவர். உறவினர் பாஸ்கர் என்பவரின் மூலம் ரூபாய் 9 லட்சத்தை ஜெயகுமாரிடம் கொடுத்து, முறைகேடாக அவர் தேர்ச்சி பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் கூறுகின்றனர். விஏஓ நாராயணனை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments