கொரோனாவுக்கு மருந்து கிடைப்பது எப்போது..?
கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
உலகம் மொத்தத்தையும் சீனாவின் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்க தொடங்கி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சீன அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இரண்டே வாரங்களில் முன்னதாகப் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு வெளியே ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்சில் தலா ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் 25 நாடுகளில் இந்த நோயின் தாக்கம் இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா காரணமாக சீனா சுமார் 6 கோடி மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. எங்கும் பயணிக்க முடியாத நிர்ப்பந்தத்தில் சீன மக்கள் அச்சத்துடன் வீடுகளில் ஒடுங்கிக் கொண்டுள்ளனர். லட்சக்கணக்கான சீனர்கள் புத்தாண்டையொட்டி பயணம் மேற்கொண்டிருப்பதால் இந்த கொடிய தொற்று நோய் பல நாடுகளுக்குப் பரவி வருவதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் சீனாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3 ஆயிரத்து 700 பேர் கெரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே சீனாவுக்கு இயக்கப்பட்டு வந்த கேத்தே பசிபிக் விமான நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் 27 ஆயிரம் தொழிலாளர்களை ஊதியம் பெறாமல் 3 வாரங்களுக்கு விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் அதிபர் ஸீ ஜின்பிங் கலந்துக் கொண்டார். அப்போது கொரனோ வைரஸ் கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ முடியாத ஆபத்தான நிலைக்கு போய் விட்டதாக அவர் வேதனை தெரிவித்தார்.
உலக நாடுகளின் ஒத்துழைப்போடு அதை முறியடிக்க வேண்டும் என்று கூறிய அவர் சட்டரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் இந்த சவாலை சந்திக்க வேண்டும் என்றார். அவசர நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களின் உடல் நலம் தொடர்பான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
இதனிடையே கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் சீனாவின் ஸிஜியாங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக சீன டிவி ஒன்று தகவல் வெளியிட்டது. இதேபோல் இங்கிலாந்தின் சில ஆய்வாளர்களும் மருந்து கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார மையத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் ஜஸாரிவிக், ஒரு புதிய நோய்க்கிருமிக்கு எதிராக மருந்துகள் அல்லது தடுப்பூசிகளை உருவாக்கி சோதிக்கும் செயல்முறை நிறைவேற பல ஆண்டுகள் ஆகும் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது வரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
Comments