பூ வியாபாரி மனைவியின் வங்கிக் கணக்கில் 30 கோடி ரூபாய் திடீர் வரவு...
கர்நாடக மாநிலத்தில் பூ விற்கும் பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் திடீரென 30 கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டதால் அவரது குடும்பம், அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்ந்துள்ளது.
சன்னபட்னா என்ற இடத்தைச் சேர்ந்த சையத் மாலிக் புர்ஹான் என்பவர் தனது மனைவியுடன் பூ கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அவரது வீட்டுக்கு வந்த வங்கி அதிகாரிகள் சிலர், பெரும் தொகை ஒன்று அவரது மனைவியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகக் கூறி வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போதுதான் தனது மனைவியின் வங்கிக் கணக்கில் 30 கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்ட விஷயம் அவருக்கு தெரியவந்தது.
ஆன்லைன் மூலம் தனது மனைவி சேலை வாங்கியதாகக் கூறிய அவர், பின்னர் சிலர் அவரைத் தொடர்பு கொண்டு சேலை வாங்கியதில் பரிசாக கார் வழங்க இருப்பதாகக் கூறி, வங்கி கணக்கு குறித்த விபரங்களை வாங்கியதாகக் குறிப்பிட்டார். இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் ராம்நகர போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது புர்ஹானின் மனைவி வங்கிக் கணக்கை மர்ம நபர்கள் சிலர் இயக்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும், அவர்களை விரைவில் கைது செய்வோம் என்றும் குறிப்பிட்டனர்.
Comments