குரூப் 2 தேர்வில் 97 கிட்ஸ் கைவரிசை..! விழிபிதுங்கும் டி.என்.பி.எஸ்.சி

0 10496

குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வுகளை போல 2018 ல் நடந்த குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 97 கிட்ஸ் செய்த தில்லுமுல்லுகளால் டி.என்.பி.எஸ்.சி விழிபிதுங்கி நிற்கும் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... 

பட்டப்படிப்பு முடித்து... நல்ல மதிப்பெண் பெற்று நாள்தோறும் காலை முதல் மாலை வரை கன்னிமாரா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நூலகங்களில் தங்களை போட்டித் தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்ளும் ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையினரை இன்றும் பார்க்க முடிகின்றது.

இவர்களுக்கு எல்லாம் கிடைக்காத அரசுப் பணி டி.என்.பி.எஸ்.சி தேர்வின் மூலம் அண்ணன், தம்பி, மனைவி, கொழுந்தியாள், தங்கச்சி என ஒரே வீட்டில் உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும், அரசு அதிகாரிகளின் வாரிசுகளுக்கும், வட்டிக்கடைகாரர் மகனுக்கும் எப்படி முதல் 100 இடங்கள் கிடைக்கிறது ? என்பதற்கு தற்போதைய கைது காட்சிகளே சாட்சியாக உள்ளன.

இந்த நிலையில் குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் நடந்த குரூப் 2 தேர்விலும் முறைகேடு அரங்கேறி இருப்பதாக பகிரங்கக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சியால் நடத்தப்படும் தேர்வுகளில் சார் பதிவாளர், ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு உதவியாளர், நகராட்சி ஆணையர், பிரிவு அதிகாரி, தணிக்கை ஆய்வாளர்,கைத்தறி ஆய்வாளர், கூட்டுறவு ஆய்வாளர் என 23 வகையான அதிகாரமிக்க பொறுப்புகளில் அமர வேண்டுமானால் குரூப் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும்.

2018 ஆம் ஆண்டில் 1,334 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது, இதில் 6 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 2019 நவம்பர் 23 ந்தேதி முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் 17ந்தேதி வெளியானது.

இதில் தேர்வாகி முதல் 100 இடங்களை பிடித்த 97 பேரும் 1997 ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகள் என்பது தான் இந்த சந்தேகம் எழ முதற்காரணம்..!

குரூப் 2 ல் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என்ற இரண்டு நிலைகளைக் கடந்து, அரசுப் பணிக்கான நேர்முகத் தேர்வுக்குச் செல்ல இருக்கும் இந்த 97 கிட்ஸ் அனைவருக்கும் 20 மற்றும் 21 வயதைத் தொட்டவர்கள்.

கல்லூரி மாணவர்களான சிலர் செமஸ்டர் தேர்வுக்குக் கூட தயாராகாமல் சுற்றித் திரிந்தவர்கள், அவர்களால் எப்படி குரூப் 2 தேர்வு எழுதி அரசுப் பணிக்கு தேர்வாகி இருக்க முடியும் ? என்ற கேள்விக்கு அதிகாரிகளிடம் பதில் இல்லை..!

இந்த 97 பேரில் பலர் ஏற்கனவே அரசுப் பணிகளில் உள்ளவர்களின் உறவினர்களாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வுகளைப் போல குரூப் 2 தேர்விலும் முறைகேடுகள் நடந்திருக்க அதிக வாய்ப்புள்ளதாக புகார் கூறப்படுகின்றது.

வருகிற 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வுக்கு தயாராக இருக்கும் 97 பேரிடமும் சிறப்பு கவனிப்புடன் விசாரித்தால் 97 கிட்ஸ் செய்திருக்கும் சாகச வேலைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது..!

டி.என்.பி.எஸ்.சி கடந்த 5 ஆண்டுகளில் தாங்கள் நடத்திய தேர்வுகள் அனைத்தையும் மறு ஆய்வு செய்து அரசுப் பணிகளில் இருப்பவர்களை துறை ரீதியாக முழுமையாக விசாரிக்க வேண்டும், இல்லையேல் ஒரே குடும்பத்தில் இருவர் அல்ல, அனைவருமே அரசு ஊழியர்கள் ஆகும் விந்தை தொடரவே செய்யும் என்கின்றனர் பணிவாய்ப்பு கிடைக்கப் பெறாமல் ஏமாற்றத்துக்குள்ளாகி காத்திருக்கும் பட்டதாரிகள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments