Group 2A தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 3 பேர் கைது
குரூப்2ஏ தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2017ம் ஆண்டு நடைபெற்ற குரூப்2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 16 பேரும், குரூப் 4 தேர்வில் 16 பேர்கள் என மொத்தம் 32 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், காவலர் சித்தாண்டி செவ்வாயன்று போலீசாரிடம் பிடிபட்ட நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள வணிகவரி அலுவலகத்தில் பணியாற்றி வரும் கார்த்திக் மற்றும் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் பூபதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில், சித்தாண்டி குரூப் 2ஏ தேர்வில் 7 தேர்வர்களிடம் மொத்தம் 82 லட்சத்து ஐம்பதாயிரம் வரை பணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட உதவியதுடன், 2019ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்விலும், 15 தேர்வர்களிடம் தலா 7 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வசூலித்து முக்கிய குற்றவாளி ஜெயகுமாரிடம் கொடுத்தது தெரியவந்துள்ளது.
இதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரைச் சேர்ந்த சென்னை மாநகர ஆயுதப்படை காவலர் பூபதி குரூப் 2ஏ தேர்வில் 5 தேர்வர்களிடம் இருந்து ரூபாய் 55 லட்சம் வரை பணம் பெற்று, விழுப்புரம் மாவட்டம் அரியூர் விஏஓ நாராயணன் மூலமாக ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார்.
அதேபோன்று, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் உறவினர் பாஸ்கர் என்பவரின் மூலம் ரூபாய் 9 லட்சத்தை ஜெயகுமாரிடம் கொடுத்து, முறைகேடாக தேர்ச்சி பெற்று, சென்னை எழிலகத்தில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி அறிவித்துள்ளது.
இதனிடையே, குரூப் - 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த, டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஓம் காந்தனை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக சிபிசிஐடி அலுவலகத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.
Comments