நடிகர் விஜயிடம் வருமானவரி சோதனை

0 2290

பிகில் திரைப்படத்திற்கு பைனான்ஸ் செய்த மதுரை அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், நடிகர் விஜயிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டுள்ளனர். 

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து விநியோகித்தது. இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில், காலை 10 மணி முதல் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் உரிமையாளர் கல்பாத்தி அகோரம் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.

பிகில் படத்துக்கு பைனான்ஸ் செய்ததாக கூறப்படும் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவன உரிமையாளரான அன்புச்செழியனின் தியாகராய நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகம், மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள அவரது அலுவலகம் ,மதுரை தெப்பக்குளம் பகுதியிலுள்ள அவரது நண்பர் சரவணனின் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது, நடிகர் விஜய்க்கு பிகில் படத்தில் நடித்ததற்காக அளிக்கப்பட்ட சம்பளம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம், வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் தொடர் விசாரணைக்காக அவரை சென்னைக்கு வருமாறு வருமான வரித்துறையினர் கேட்டுக் கொண்டதை அடுத்து நடிகர் விஜய் தனது காரில் முன்னே செல்ல வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

இதனிடையே சென்னை சாலிகிராம் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜயின் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இதே பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் விஜயின் பிள்ளைகள் இருவரும் இருப்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments