டிரம்ப் முகத்துக்கு எதிரே உரையை கிழித்துப் போட்ட பெண் சபாநாயகர்
அமெரிக்காவில், அதிபர் டொனல்டு டிரம்புக்கும், சபாநாயகர் நான்சி பெலோசிக்கும் இடையே, பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. நான்சி பெலோசி கை குலுக்க கையை நீட்டியபோதும், கைகுலுக்க டிரம்ப் மறுத்த நிலையில், அவரது உரை குறிப்பை முகத்து எதிரே, நான்சி பெலோசி கிழித்துப் போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில், அதிபர் டொனல்டு டிரம்ப் உரையாற்றினார். முன்னதாக, உரையாற்ற வந்த அதிபர் டிரம்பை வரவேற்கும் விதமாக, சபாநாயகர் நான்சி பெலோசி, கைகுலுக்கும் வகையில், கையை நீட்டினார். ஆனால், டிரம்ப் கைகுலுக்க மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அதிபர் டிரம்ப், அமெரிக்க பாதுகாப்பை வலுப்படுத்தவும், இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் எதிராகவும் கடுமையாக போராடி வருவதாகத் தெரிவித்தார். ஈரான் அரசு அணுஆயுதங்களை தேடுவதை கைவிட்டுவிட்டு, சொந்த மக்களின் நலனுக்காக உழைக்க தொடங்க வேண்டும் என்றார்.
ஈரானின் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் தங்களுக்கு உதவ முடியும் என்றபோது, அதை பற்றி அறியா நிலையில் இருக்கும் ஈரானியர்கள், வீண் பெருமைபேசி காலத்தை கழிப்பதாகவும் கூறினார். ஈராக் மற்றும் சிரியாவில், ஐஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் 100 விழுக்காடு அளவிற்கு முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்ப் தனது பேச்சை நிறைவு செய்தபோது, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, அதிபரின் உரைக் குறிப்பை, ஒவ்வொன்றாக எடுத்து, கிழித்துப்போட்டார். பேப்பர் கிழிபடும் சப்தம் கேட்டபோதும், அதை கண்டும் காணாமல், அதிபர் டிரம்ப் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8
Comments