இந்த தேர்விலும் முறைகேடா ? கிளம்பியுள்ள அடுத்த பூதம்

0 1650

டிஎன்பிஎஸ்சி தேர்வை போலவே, கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணயம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் செவ்வாய்கிழமை வெளியாகின.

எழுத்துத் தேர்வு, உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு என 3 நிலைகளாக நடைபெறும் தேர்வில், உடற்தகுதி தேர்வுக்கான அழைப்புப் பட்டியலிலேயே இடம்பெறாத கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இருவரின் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிகரம் தொடு என்ற பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் இந்த தேர்வில் நூற்றுக்கணக்கானோர் முறைகேடு செய்து வெற்றிபெற்றதாக புகார் எழுந்தது.

இதே பயிற்சி மையத்தில் பயின்றவர்கள்தான் தற்போது வெளியாகியுள்ள தேர்வு முடிகளின்படி அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக தேர்ச்சி பெற்றவர்களின் பதிவு எண்கள், ஒரே வரிசையில் அடுத்தடுத்த எண்களாக இருப்பதுதான் சந்தேகத்தை மேலும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த முறைகேடு சர்ச்சையில் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற சார்பு ஆய்வாளர் தேர்வும் இடம்பெற்றுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே சிகரம் தொடு பயிற்சி மையத்தில் பயின்றவர்களுக்கு தேர்வு நடைபெறும் நாளுக்கு முன்னதாகவே விஐடி பல்கலைக்கழகத்தில் அவர்கள் தேர்வு எழுதிய அறை, இருக்கை எண்கள் குறித்த விவரங்கள் அந்தந்த மாணவர்களுக்கு வாட்சப்பில் பகிரப்பட்டதற்கான ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. 

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பான புகார்களும் விசாரணைகளும் கைதுகளும் ஏற்படுத்தி வரும் சலசலப்பு அடங்குவதற்கு முன்னதாகவே, காவல்துறை தேர்வுகளிலும் முறைகேடு நடந்திருப்பதாக அடுத்த பூதம் கிளம்பியுள்ளது. முறையாக விசாரணை மேற்கொண்டு இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு....

Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments