இந்தியா- அமெரிக்கா இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம்..!
அமெரிக்க அதிபர் டிரம்ப் இம்மாதம் 21 முதல் 24ம் தேதி வரையிலான நாட்களில் இந்தியா வர உள்ள நிலையில், பிரதமர் மோடியுடன் அவர் நடத்த உள்ள பேச்சுவார்த்தையை தொடர்ந்து பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியில் இருநாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்க வர்த்தக பிரதிநிதியான ராபர்ட் லைட்திசர் ((robert lighthizer)) விரைவில் டெல்லி வருகிறார். தொழில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். அப்போது வர்த்தக ஒப்பந்தத்தில் இடம் பெறும் அம்சங்கள் இறுதி வடிவம் பெறும். இருதரப்பும் பலன் அளிக்கக் கூடிய வகையில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
விவசாயிகள் மற்றும் சிறுவியாபாரிகளின் நலன்களை விட்டுக் கொடுத்து அமெரிக்காவுடன் சமரசம் செய்ய இயலாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. பிப்ரவரி முதல் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலும் அரசின் இந்த நிலைப்பாடு பிரதிபலித்தது. இந்தியாவின் சந்தைகளில் வேளாண் பொருட்களை தங்கு தடையின்றி விற்னை செய்வதில் அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகின்றது.
பால் பண்ணை பொருட்கள், மருத்துவ கருவிகள், மூட்டு வலிக்கான இம்பிளாண்ட்டுகள். ஸ்டென்ட்டுகள் போன்றவற்றுக்கு இந்தியா வர்த்தகத் தடைகளை அகற்ற வேண்டும் என்று அமெரிக்கா கோரி வருகிறது.இதே போன்று இந்தியாவும் அமெரிக்காவிடமிருந்து பெட்ரோலியப் பொருட்களையும் எரிவாயுவையும் அதிக அளவில் வாங்குவதற்கு ஆர்வம் கொண்டுள்ளது. இவை இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் முக்கிய இடம் பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments