வெட்டுக்கிளிகளால் உணவுப் பேரழிவு உண்டாக வாய்ப்பு
ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் பரவி வரும் வெட்டுக் கிளிகள் படையெடுப்பால் உணவுப் பேரழிவு உண்டாக வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த வாரம் திடீரென லோகஸ்ட் வகையைச் சேர்ந்த லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்து பயிர்களை நாசம் செய்தன. இதையடுத்து அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் தற்போது வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளன. அடுத்தகட்டமாக தெற்கு சூடான், உகாண்டா மற்றும் எரித்திரியா நாடுகளுக்கும் வெட்டுக்கிளிகள் வர வாய்ப்பிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பான FAO தெரிவித்துள்ளது.
வெட்டுக்கிளிகளிள் திடீர் படையெடுப்பால் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ள அந்த அமைப்பு இதனால், உணவுப் பொருள் உற்பத்தில் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் வரும் ஜூன் மாதத்திற்குள் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை 500 மடங்கு வரை அதிகரிக்கும் எனவும் FAO தெரிவித்துள்ளது.
இதனிடையே லோகஸ்ட் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் சோமாலியாவிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து விமானம் மூலம் பூச்சி மருத்து தெளிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளன. தானியங்களோடு புற்களையும் வெட்டுக்கிளிகள் கபளீகரம் செய்வதால் வளர்ப்பு கால்நடைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சவுதி அரேபியாவிற்கு படையெடுத்துள்ள லோகஸ்ட்டுகள் அங்கிருந்து ஏமன், ஓமன் நாடுகளுக்கும் பரவி வருகின்றன. கடந்த 2013ம் ஆண்டு எகிப்தில் இருந்து பரவிய வெட்டுக்கிளிகள் ஏற்படுத்திய தாக்கம் பல ஆண்டுகள் நீடித்தது.
தற்போது கடந்த ஆண்டும், நடப்பாண்டும் இந்திய, பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலைவனப் பகுதியில் இருந்து வெட்டுக்கிளிகள் பரவி வருவதால் அப்பகுதியில் ஆய்வு நடத்தி, லோகஸ்ட்டுகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ஐநா சபை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments