வெறும் கோவில் அல்ல, இது பேரதிசயம்..! தமிழர் சிறப்புரைக்கும் தஞ்சை பெரிய கோவில்

0 3426

நெஞ்சை அள்ளும் தஞ்சை பெரிய கோவிலின் அமைப்பு மற்றும் அதன் சிறப்பு குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி...

தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை 985 முதல் 1014 வரையான ஆண்டுகளில் ஆட்சி செய்தவர் அருள்மொழிவர்மன். சோழ தேசத்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கி அவர்களை வளமாக வாழச் செய்த அருள்மொழிவர்மனுக்கு ராஜராஜசோழன் என்ற பெயர் வரலாற்றில் கம்பீரமாக நிலைத்து நிற்கிறது.

மன்னர் ராஜராஜசோழன் காலத்தில் ஏராளமான ஆலயங்கள் கட்டப்பட்டிருந்தாலும் அவரது புகழை ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் உலகறியச் செய்து வருவது பெருவுடையார் கோவில்தான்.
அனைத்து ஆலயங்களிலும் ராஜகோபுரங்களே முதன்மை பெறும். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் மூலவர் வீற்றிருக்கும் தட்சிண மேரு என்ற விமானமே முதன்மையாகத் திகழ்கிறது! 216 அடி உயரமுள்ள இந்த விமானத்துக்கு பூமியில் போடப்பட்டிருக்கும் அடித்தளம் வெறும் ஆறு அடி மட்டுமே.

தஞ்சையின் மையப்பகுதியில் காட்சிதரும் பெரியகோவிலில் பிற்காலத்தில் மராட்டியர்கள் எழுப்பிய நுழைவுவயில் முதன்மையாக காட்சி தருகிறது. அதைக் கடந்து சென்றால் ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் கூடிய "கேரளாந்தகன் வாயில்" உள்ளது! அதற்கு அடுத்து மூன்றுநிலைகள் கொண்டதாக எழுந்து நிற்கும், ராஜராஜசோழன் கட்டிய கோபுரவாசல் நம்மை வரவேற்கிறது!

ராஜராஜன் வாசலில் இருபுறமும் உள்ள , யானையை விழுங்கும் பாம்பு , துவாரபாலகர்களின் கால்களைச் சுற்றியிருக்கும் பாம்பு ஆகியவை சிறப்பு வாய்ந்த சிற்பங்களாகப் பார்க்கப்படுகின்றன!

கோவிலின் உள்ளே இருக்கும் தனி மண்டபத்தில், 20 டன் எடை, இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலத்துடன் மிகப்பெரிய நந்தி சிலை காணப்படுகிறது. நந்தி மண்டபத்தை அடுத்து சில படிகள் ஏறினால் மகா மண்டபம் உள்ளது !! அதன் வலது புறம் விநாயகரும் இடதுபுறம் துர்கா தேவியும் வீற்றிருக்கின்றனர்!

அரங்கம் போல அமைந்த இந்த மகாமண்டபத்தில்தான், தெய்வங்களின் செப்புச் சிலைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன !! அண்மையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவால் மீட்டுக் கொண்டு வரப்பட்ட ராஜராஜன் ஐம்பொன் சிலையும் இங்கு வைத்துதான் வழிபடப்படுகிறது.

கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப் பெரியது. ஆறு அடி உயரமும் 54 அடி சுற்றளவும் உள்ள ஆவுடையாரின் மேல், பதின்மூன்று அடி உயரமும் இருபத்து மூன்றரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் பிரம்மாண்டமாய் காட்சி தருகிறது. கருவறையில் உள்ள வண்ண வண்ண ஓவியங்கள் சித்திரக் கலையின் சிறப்பைச் சித்தரிக்கின்றன !! மேல்தளச் சுற்றில் பல வகையான நடன பாவங்கள் சிற்பங்களாக உள்ளன.

பரந்த வெளிகளுடன் உயர்ந்த கோட்டை மதில் சுவர்களும், நீர் நிறைந்த அகழியும் சூழ்ந்த, இந்த அற்புத ஆலயத்திற்கு தமிழகம் , அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாட்டவர்கள் பலரும் , தினமும் சுற்றுலாவாகவும் , வழிபாட்டிற்காகவும் வந்து மகிழ்கின்றனர்.

தரணி போற்றும் தஞ்சை பெரியகோவில் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நின்று தமிழனின் பெருமையை பறைசாற்றிக் கொண்டே இருக்கும்...

Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments