ஆயிரம் ஆண்டு பழமையான தஞ்சை பெரிய கோவிலில் இன்று குடமுழுக்கு விழா

0 2909

தஞ்சை பெரியக்கோவிலில் இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் தஞ்சை நகரில் திரண்டுள்ளனர்.

தஞ்சை பெருவுடையார் கோயிலில் கடைசியாக கடந்த 1996ம் ஆண்டு குடமுழுக்கு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அக்கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு புதன்கிழமை குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி கோயிலில் கடந்த 1ம் தேதி முதல் 8 கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோவிலில் அதிகாலை 8ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 9.30 மணியிலிருந்து 10 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. முதலில் விநாயகர் கோயில் கோபுரத்திலும், பிறகு சுப்பிரமணியர் கோயில் கோபுரம், பெருவுடையார் கோயில் கோபுரம், பரிவார தெய்வங்கள் கோயில் கோபுரம் ஆகியவற்றிலும், இதையடுத்து ராஜகோபுர கலசங்களிலும் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெறும். அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு பெரியநாயகி உடனுறை மற்றும் பெருவுடையாருக்கு பேரபிஷேகமும் இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற இருக்கிறது.

குடமுழுக்கை காண சுமார் 5 முதல் 7 லட்சம் பேர் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு அடிப்படை மற்றும் மருத்துவ வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளன.அதன்படி கோவில் மற்றும் கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 275 தண்ணீர் தொட்டிகள் மற்றும் 238 தற்காலிக கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ உதவிக்காக 100 மருத்துவர்கள், 6 மருத்துவக்குழுக்கள், 26 நடமாடும் மருத்துவக்குழுக்கள், 28 அவசர சிகச்சை ஊர்திகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுபோக நவீன தீயணைப்பு வாகனம் மற்றும் 5 சாதாரண வாகனங்களோடு, 16 பாம்புபிடி வீரர்களும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக 21 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாற்று திறனாளிகளின் வசதிக்காக சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. முதியவர்களுக்காக 30 பேட்டரி வாகனங்களும், இவை தவிர கோவிலினுள் நடைபெறும் நிகழ்ச்சிகளை வெளியில் இருந்து காணும் வகையில் எல்.ஈ.டி. திரைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. கோவில் உள்பகுதி மற்றும் வெளியில் ஏற்கனவே பொருத்தியிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களோடு கூடுதலாக 8 அதிநவீன கேமிராக்கள் உள்பட 192 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க கட்டுபாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.சுமார் 5500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடமுழுக்கு விழாவை காண பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

குடமுழுக்கை முன்னிட்டு, பெரிய கோயில் சிறப்பு அலங்காரத்துடன் ஜொலிக்கிறது. புதுப்பொலிவு பெற்றுள்ள தஞ்சை நகரம் மின்விளக்கு அலங்காரத்தில் மின்னியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments