அதிமுக பிரமுகர் கொலை..! கூலிப்படையை விரைந்து பிடித்த போலீசுக்கு பாராட்டு

0 951

ஈரோடு அருகே, ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் தொடர்புடைய நபர்களை ஒரு மணி நேரத்திலேயே விரட்டிச் சென்று மடக்கி பிடித்து, கைது செய்த போலீசாருக்கு, மாவட்ட எஸ்.பி ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.

ஈரோடு மாவட்டம் சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவரும் அதிமுக பிரமுகருமான சின்னத்தங்கம் என்கிற ராதாகிருஷ்ணன், செல்லம்பாளையம் பகுதியில் உள்ள டூவீலர் மெக்கானிக் கடையில் நின்றிருந்துள்ளார். அப்போது அவ்வழியே ஸ்கார்பியோ காரில் வந்த 5 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் ,ராதாகிருஷ்ணனை நடுரோட்டில் வைத்து ஓட ஓட வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இந்த தகவல் கிடைத்ததையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இதனிடையே, கவுந்தப்பாடி காவல் நிலையம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த கூலிப்படையினரின் ஸ்கார்பியோ கார், நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து உதவி ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் தலைமை காவலர் அன்பு ராஜா, ஓட்டுநர் சதீஷ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் காரை துரத்தி சென்றுள்ளனர். ஸ்கார்பியோ காரை போலீசார் துரத்திவருவதைக் கண்ட பொதுமக்கள், தர்மாபுரி என்ற இடத்தில் வைத்து வழிமறித்துள்ளனர். இதனை எதிர்பாராத கொலையாளிகள், வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓட, போலீசாரும், பொதுமக்களும் துரத்திச் சென்று கூலிப்படையை சேர்ந்த மூவரை மடக்கி பிடித்தனர்.

அதன் பிறகு மேலும் இருவரை கைதுசெய்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஐவரும் சென்னையைச் சேர்ந்த சரவணன், பாலமுருகன், ராஜேஷ், முத்துமாரி, சிவா என்பது தெரியவந்தது. 2013ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் தொழில் போட்டியால் கொலைசெய்யப்பட்ட சேகர் என்பவரின் கொலைக்கு பழிதீர்க்க அவரது மகனான அரவிந்த் என்பவர், இவர்களை கூலிப்படையாக ஏவியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே கொலை நடந்து ஒரு மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பொதுமக்கள் உதவியுடன் கூலிப்படையினரை மடக்கிப் பிடித்த கவுந்தப்பாடி காவல் உதவி ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமை காவலர் அன்பு ராஜா மற்றும் சலங்கபாளையத்தை சேர்ந்த ஓட்டுநர் சதீஷ் ஆகியோரை ஈரோடு மாவட்ட எஸ்.பி, சக்திகணேசன் நேரில் சென்று பாராட்டினார். ரொக்க பரிசு வழங்கியும் அவர்களை கெளரவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments