சத்து மாத்திரை என சயனைடு மாத்திரை... ஆன்லைன் ஆர்டர் மூலம் மனைவி கொலை

0 13764

ஆந்திராவில் கூடுதல் வரதட்சனை வாங்கிவராத மனைவிக்கு சத்து மாத்திரை எனக் கூறி, சயனைடு நிரப்பிய மாத்திரையை கொடுத்து தனியார் வங்கி மேலாளர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மதனபள்ளி பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரியும் திருப்பதியை சேர்ந்த ரவி சைதன்யா என்பவருக்கும், முன்சூலூர் பகுதியை சேர்ந்த ஆமினி என்ற பெண்ணுக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணமான நிலையில், பெண்வீட்டார் 15 லட்சம் ரூபாய் ரொக்கமும் ஒரு ஏக்கர் நிலமும் வரதட்சனையாக கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆமினியின் சகோதரிக்கு திருமணம் நடந்த போது, அவரது பெற்றோர் 2 ஏக்கர் நிலத்தை வரதட்சனையாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரவிசைதன்யா இதனை சுட்டிக்காட்டி மனைவியிடம் அவ்வப்போது சண்டையிட்டு வந்ததாகவும், தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை விற்று பணமாக கொண்டு வருமாறு வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி ஆமினி பாத்ரூமில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்ததாக அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்த ரவிசைதன்யா, மனைவியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ஆமினியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறிய நிலையில், உடலை எடுத்து செல்ல முயன்றுள்ளார். ஆனால் போலீசார் வழக்கு பதிந்து உடற்கூராய்வுக்கு பின்னரே உடலை கொண்டு செல்ல முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து நடைபெற்ற பிரேத பரிசோதனையில் ஆமினி சயனைடு சாப்பிட்டு உயிரிழந்தது தெரியவரவே, சந்தேகமடைந்த போலீசார் ஆமினியின் பெற்றோரிடம் விசாரிக்க ரவிசைதன்யா கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தியதை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ரவிசைதன்யாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், மனைவியை சயனைடு கொடுத்து கொன்று விட்டு நாடகமாடியதை ஒப்புக் கொண்டுள்ளான். ஆன்லைனில் சயனைடு ஆர்டர் செய்து வாங்கிய ரவி சைதன்யா, அதனை சாதாரண சத்து மாத்திரை ட்யூபில் நிரப்பியுள்ளான்.

பின்னர் உடல் நலிந்து காணப்படுவதால் சத்துமாத்திரை வாங்கிவந்ததாகக் கூறி மனைவியிடம் கொடுத்து சாப்பிட வைத்துள்ளான். அதனை சாப்பிட்ட ஆமினி பரிதாபமாக உயிரிழந்தவுடன், பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ரவிசைதன்யாவை கைது செய்த போலீசார், ஆன் லைனில் சயனைட் பெற்றது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments