குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டி கைது...
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முதல்நிலை காவலர் சித்தாண்டி, ராமநாதபுரம் அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமார், காவலர் சித்தாண்டி இருவரும் தலைமறைவாக இருந்தனர். இதில், சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணணூரைச் சேர்ந்த முதல்நிலை காவலர் சித்தாண்டி, குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டிலும் ஈடுபட்டதும், தேர்வர்களிடம் 13 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
அவர் மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுவதற்காக போலி ஆவணம் தயாரித்தல், பொய்யாக புனையப்பட்ட ஆவணங்களை உண்மை என கூறி பயன்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சித்தாண்டியின் சகோதரரும் அரசுப் பணியில் இருந்தவருமான வேல்முருகன் மற்றும் உறவினரும் ஆயுதப்படை காவலருமான முத்து உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் அருகே சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக, சித்தாண்டி மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளை சிபிசிஐடி முடக்கியது. சித்தாண்டியின் உறவினரும், தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆயுதப்படை காவலருமான முத்து என்பவரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
இதேபோல, இடைத்தரகர் ஜெயக்குமாரின் 12 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. சென்னை முகப்பேர் மேற்கில் ஜெயக்குமார் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் பென்டிரைவ் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முறைகேட்டில் தொடர்புடைய நபர்களிடம் ஜெயக்குமார் தன்னுடைய செல்போன் மூலம் நேரடியாகப் பேசியதில்லை என்றும், ஓட்டுநர் உள்ளிட்ட பிறரின் செல்போன்கள் மூலமே தொடர்புகொள்வதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவன் எங்கு பதுங்கியுள்ளான் என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனிடையே, இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சித்தாண்டி உள்ளிட்ட 24 பேரில், தேர்வு முறைகேடுகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நபர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. விரைவில் இதற்காக விரைவில் நீதிமன்றத்தை அணுக உள்ளனர். மேலும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 8 பேரிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments