வீடு வாங்க கட்டுப்பாடு?

0 4574

தனிநபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க ஏன் கட்டுப்பாடுகள் விதிக்க கூடாது? என்பது குறித்து பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், 369 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, நிலம் கையகப்படுத்தும் விதிகளை பின்பற்றி அறிவிப்பு வெளியிடவில்லை எனக்கூறி அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 17 லட்சத்து 70 ஆயிரம் பேர் வீடு இல்லாமல் இருப்பதாக குறிப்பிட்டனர். இவர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி தர நிலங்கள் கையகப்படுத்தும்போது, அதிகாரிகளால் உரிய சட்ட விதிகள் பின்பற்றபடாததால் அரசின் முயற்சிகள் தோல்வியடைவதாக அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், வீடு வாங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தால் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவது தடுக்கப்படும் என தெரிவித்த அவர்கள், 2-க்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருப்போரின் வருவாய் ஆதாரங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து, அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்.

அப்போது இந்தியாவில் எத்தனை குடும்பங்களுக்கு சொந்த வீடு உள்ளது? குறிப்பாக, தமிழகத்தில் எத்தனை பேருக்கு சொந்த வீடு உள்ளது? மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம் எப்பொழுது முழுமையாக நிறைவேற்றப்படும்? நாட்டில் எத்தனை பேருக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன? என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

மேலும், அனைவருக்கும் வீடு' திட்டம் முழுமையாக நிறைவேறும் வரை தனி நபர் ஒன்றிற்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க ஏன் கட்டுப்பாடுகள் கொண்டு வர கூடாது ? தனி நபர் வாங்கும் 2-வது வீட்டிற்கான பத்திரப்பதிவு, வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம் என அனைத்தையும் ஏன் 2 மடங்காக உயர்த்த கூடாது ? என கேள்வி எழுப்பினர்.

ஒன்றிற்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க கடன் கொடுக்க கூடாது என வங்கிகளுக்கு ஏன் தடை விதிக்க கூடாது ? வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் இந்தியாவில் நிலம் வாங்க ஏன் தடை விதிக்க கூடாது ? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மார்ச் 6 -ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய- மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments