வீட்டு வாசலில் யார் கோலமிடுவது? அற்பத் தகராறு.. 4 பேர் உயிர் பறிபோன பரிதாபம்..!
வாசல் தெளித்து கோலமிடுதல் என்ற அற்ப விவகாரத்தில் மாமியார் மருமகள் இடையே ஏற்பட்ட தகராறு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கணவன், மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு வழிவகுத்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் பெங்களூருவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி நிர்மலாவும் 2 வயது மகள் சஞ்சனா ஸ்ரீ, 1 வயது மகள் ரித்திகா ஸ்ரீ ஆகியோரும் கொடைக்கல்லில் வெங்கடேஷின் தாய் தந்தையுடன் வசித்து வந்தனர். நேற்று நிர்மலாவின் மாமியார் வினிதா வீட்டு வாசலில் கோலமிட்டிருந்த நிலையில் அதனை அழித்துவிட்டு நிர்மலா மீண்டும் கோலமிட்டதாகக் கூறப்படுகிறது.
அது குறித்து வினிதா தனது மருமகளிடம் கேட்டதையடுத்து இருவருக்கும் கடும்வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் வசைபாடியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நிர்மலா வீட்டு மேல்மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில் உடற்கூறு ஆய்வுக்காக அவரது உடலை போலீசார் சோழிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் தகவல் அறிந்து பெங்களூரில் இருந்து கொடைக்கல் கிராமத்துக்கு வந்த வெங்கடேஷ், தனது பெற்றோர் உள்ளிட்ட எவரிடமும் ஏதும் பேசாமல் தனது இரு குழந்தைகளுடன் கார் ஒன்றில் புறப்பட்டுச் சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
அவர் தனது மனைவியின் உடலை காணச்சென்றதாகக் கருதப்பட்ட நிலையில் வாலாஜா சாலை ரயில் நிலையம் அருகே வெங்கடேஷ் மற்றும் இரு குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வெங்கடேஷ் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் விரைவு ரயில் முன் குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
வெங்கடேஷ் தனது குழந்தைகளுடன் மனைவியின் உடலை காணச் சென்றாரா? குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ளும் திட்டத்துடனேயே ரயில் நிலையத்துக்குச் சென்றாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments