டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : சித்தாண்டி,ஜெயக்குமாரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக உள்ள காவலர் சித்தாண்டி, இடைத்தரகர் ஜெயக்குமாரின் வங்கிக் கணக்குகளை சிபிசிஐடி முடக்கியுள்ளது.
இதுவரை கைது செய்யப்பட்டவர்களில், குற்றத்திற்கு மூளையாக செயல்பட்ட நபர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ முறைகேடுகள் தொடர்பாக, சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ளது. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக, பல்வேறு அரசுத் துறைகளை சேர்ந்த ஊழியர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 14 பேரும், குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முக்கியமாக தேடப்பட்டு வரும் இடைத்தரகர் ஜெயக்குமார், காவலர் சித்தாண்டி இருவரும் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில், ஜெயக்குமாரின் 12 வங்கிக் கணக்குகளை சிபிசிஐடி போலீசார் முடக்கியுள்ளனர். இதேபோல சித்தாண்டி மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
சித்தாண்டியின் உறவினரும், தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆயுதப்படை காவலருமான முத்து என்பவரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 23 பேரில், தேர்வு முறைகேடுகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நபர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. விரைவில் இதற்காக விரைவில் நீதிமன்றத்தை அணுக உள்ளனர். மேலும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 8 பேரிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments