பெரியகோயிலில் நாளை குடமுழுக்கு.. விழாக்கோலம் பூண்டது தஞ்சை..!
தஞ்சை பெரியகோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடைபெறும் குடமுழுக்கு விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருவதால், அந்நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.
தஞ்சை பெருவுடையார் கோயிலில் கடைசியாக கடந்த 1997ம் ஆண்டு குடமுழுக்கு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அக்கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு நாளை குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி கோயிலில் கடந்த 1ம் தேதி முதல் 8 கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன்படி இன்று 6 மற்றும் 7ம் கால பூஜைகள் நடைபெறுகின்றன.
பின்னர் நாளை அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை 8ம் கால பூஜை நடைபெறவுள்ளது. இதையடுத்து காலை 9.30 மணியிலிருந்து 10 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது. முதலில் விநாயகர் கோயில் கோபுரத்திலும், பிறகு சுப்பிரமணியர் கோயில் கோபுரம், பெருவுடையார் கோயில் கோபுரம், பரிவார தெய்வங்கள் கோயில் கோபுரம் ஆகியவற்றிலும், இதையடுத்து ராஜகோபுர கலசங்களிலும் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெறுகிறது.
குடமுழுக்கை முன்னிட்டு, பெரிய கோயில் சிறப்பு அலங்காரத்துடன் ஜொலிக்கிறது. குடமுழுக்கு விழாவை காண பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் பக்தர்களின் வசதிக்காக தஞ்சாவூரின் பல இடங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி, போலீஸார் உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயில் உள்ளிட்ட 110 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள், தஞ்சை எல்லையில் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன.
பெரியகோயில் இருக்கும் பகுதி வழியே செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. குடமுழுக்ககை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அறிவித்துள்ளார்.
தஞ்சை கோயிலுக்கு வரும் மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு, அதிலிருந்து குடமுழுக்கை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மிக முக்கிய பிரமுகர்களுக்கு பெருவுடையார் கோயில் சன்னதி வடக்கு பிரகாரத்திலும், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுக்கு பெருவுடையார் கோயில் சன்னதி தென் பிரகாரத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மிக முக்கிய பிரமுகர்கள் கோயிலுக்குள் வலதுபுற வாசல் வழியாகவும், முக்கிய பிரமுகர்கள் பிரதான நுழைவு வாயில் வழியாகவும், பொதுமக்கள் தென்புற வாசல் வழியாகவும் கோயிலுக்குள் வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து அதிநவீன தீயணைப்பு வண்டி ஒன்று வரவழைக்கப்பட்டு கோயில் கோபுரம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வண்டியில் 340 அடி உயரம் செல்லும் வகையில் ஏணிகள் உள்ளன.
தஞ்சை பெரியகோயில் தடையை மீறி ட்ரோன் பறந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலில் குடமுழுக்குவிழாவை முன்னிட்டு நடந்து வரும் யாக பூஜையை காண ஏராளமான பக்தர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் கோயிலின் முகப்பில் உள்ள பிராம்மாண்ட நந்தி சிலையின் மேற்புறம் காலையில் சுற்றித்திரிந்த ட்ரோன் ஒன்று திடீரென கீழே விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்து சிதறி ஓடினர்.
சேதமடைந்த ட்ரோன் காவல்துறையை சேர்ந்தது என்று கூறப்படும் நிலையில் இந்திய தொல்லியல் துறைக்கு சொந்தமான பெரிய கோவிலில் தடையை மீறி ட்ரோன் பறந்தது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
Comments