கொரோனாவைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு...

0 1245

கொரோனாவைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 426 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. நோய் பாதிப்பு பரவாமல் இருக்க, சீனாவின் பல்வேறு நகரங்கள் சீல்வைக்கப்பட்டு அங்குள்ள 6 கோடிக்கும் மக்கள் வேறு பகுதிகளுக்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். ஆயினும் அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

கொரோனாவைரசுக்கு இதுவரை 426 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2003ம் ஆண்டு சீனாவில் சார்ஸ் நோய் தாக்கியபோது ஒன்பது மாதங்களில் 349 பேர் உயிரிழந்தனர். தற்போது வேகமாக பரவி வரும் கொரோனாவைரசால் சில வாரங்களிலேயே 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வூகானில் நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை பத்தே நாட்களில் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் ஏராளமான நோயாளிகள் அழைத்துவரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவைரஸ் தாக்குதல் பாதிப்பு பரவி வருவதால் ஜப்பான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. ஹாங்காங்கில் இருந்து கடந்த மாதம் ஜப்பான் வந்த ஒருவருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, யோகோஹமா செல்லும் சொகுசுக் கப்பலில் உள்ள பயணிகளை முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்த ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கப்பலில் 2 ஆயிரத்து 600 பயணிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர்.

இதற்கிடையே, தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஹாங்காங் நகரில், கொரானா வைரஸ் பாதிப்பிற்குள்ளான 39 வயதான நபர், இன்று உயிரிழந்தார். சீனாவிற்கு வெளியே, கொரானா பாதிப்பால் நிகழும் இரண்டாவது மரணம் இதுவாகும். ஊகான் உள்ளிட்ட சீன நகரங்களில் பரவியுள்ள கொரானா வைரஸ், தனிநாடு கோரி போராட்டம் நடைபெறும், ஹாங்காங்கையும் விட்டுவைக்கவில்லை.

அங்கு, பிரின்சஸ் மார்க்ரேட் மருத்துவமனையில், கொரானா வைரஸ் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 39 வயது நபர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 21ஆம் தேதி ஊகானுக்கு, புல்லட் ரயிலில் சென்று, இரண்டே நாட்களில், கடந்த 23ஆம் தேதி ஹாங்காங் திரும்பிய அந்த நபர், கொரானோ வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.  

இதனிடையே, கொரானா வைரஸ் பாதிப்பு, ஒரு மாத குழந்தையும் விட்டுவைக்காததால், சீனர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிஜோவ் (Guizhou) மாகாணத்தில், பிறந்து ஒரு மாதமே ஆன அந்த பெண் குழந்தை கொரானா பாதிப்பு அறிகுறியுடன், சில தினங்களுக்கு முன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

குழந்தைக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்த அரசு மருத்துவர்கள், தனிவார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் உடல்நலம் நிலையாக இருப்பதாக, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments