தமிழர் சிறப்புரைக்கும்.. தஞ்சை பெருவுடையார் கோவில்..!

0 3018

தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை குடமுழுக்கு நடைபெறவுள்ளது. தமிழர் கட்டடக் கலையின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைக்கும் கம்பீர அடையாளமான பெரிய கோவிலின் சிறப்பு குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

கலை, இலக்கியம், தொழில் என அத்தனைத் துறைகளிலும் சிறந்து விளங்கிய தமிழர்கள் கட்டிடக்கலையிலும் ஈடு இணையற்ற திறமையை கொண்டிருந்ததற்கு சிறந்த உதாரணம் தஞ்சை பெருவுடையார் கோவில்.

சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த சிவ ஆலயத்தை மராட்டியர்கள் காலத்தில் பிரகதீஸ்வரர் கோவில் என்றழைத்தனர். கிபி 10-ஆம் நூற்றாண்டில் மன்னர் முதலாம் இராசராச சோழனால் கட்டப்பட்ட இந்த கோவிலின் தற்போதைய வயது ஆயிரத்துப் பத்து.

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக 1987ல் அறிவிக்கப்பட்ட இக்கோவில் தென்னிந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. இங்கு ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தியானது 20 டன் எடை, இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டு இந்தியாவிலேயே 2வது பெரிய நந்தியாக உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கத்தைக் கொண்டுள்ள தஞ்சை பெரிய கோவிலின் மூலவர் கருவறை மேலாக உள்ள விமானம் மற்ற கோபுரங்களை விட உயரமானது. கோவிலின் உச்சியில் உள்ள ஒற்றைக் கல்லால் ஆன 80 எடை கொண்ட சிகரம் தான் இன்றளவும் உலக வரலாற்று ஆய்வாளர்களை எல்லாம் வாய்பிளக்க வைக்கிறது. கடுமையான வெப்பம், கடுங்குளிர், பேய்மழை, புயல், சூறாவளி என யாவற்றையும் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்கொண்டு அண்ணாந்து பார்க்கவைக்கிறது பெருவுடையார் கோவில்.

கோயிலின் கட்டுமானப் பணிக்காக ஒரு லட்சத்து 30 ஆயிரம் டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. அருகே மலைகள் இல்லாத நிலையில், நவீன போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலையில் சுமார் 50 மைல்கள் தொலைவில் இருந்து கோயிலுக்கான கற்கள் எடுத்து வந்து கோவில் கட்டப்பட்டிருப்பது மலைக்க வைக்கிறது.

கோயிலை கட்டிய பணியாளர்கள், கட்டடக்கலை நிபுணர்கள், அவர்களின் துணிகளை சலவை செய்தவர்கள், முடி திருத்தியவர்கள் என கோயில் பணி செய்ய உதவியவர்கள் அத்தனை பேரின் பெயர்களையும் அங்குள்ள கல்வெட்டில் பதிவு செய்து வைத்திருக்கிறார் மன்னர் ராஜராஜ சோழன். அதன் மூலம் அவரின் பெருந்தன்மை புலப்படுகிறது.

இவ்வளவு சிறப்புகளையும் உள்ளடக்கிய பெருவுடையார் கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது. அதற்காக பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திருக்கிறது.

நெரிசலின்றி பக்தர்கள் எளிதாக குடமுழுக்கை காண வசதியாக கோவில் வளாகத்துக்குள் 13 இடங்களில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்ட்டுள்ளன. கோவில் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் 32 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுள்ளன. இதுதவிர நகர் பகுதியில் 160 இடங்களிலும் நகரத்துக்கு வெளியே புறவழிச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தீத்தடுப்பு மற்றும் மீட்புப் பணிக்காக அதிநவீன தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன. அவசர மருத்துவ உதவிக்காக 16 சாதாரண ஆம்புலன்ஸ்கள், 7 அதிநவீன ஆம்புலன்ஸ் வண்டிகள், 5 இருசக்கர ஆம்புலன்ஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குடமுழுக்கு நிகழ்வுக்காக 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர். மொத்தத்தில் தஞ்சை பெருநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments