பாலியல் குற்றவாளிகளுக்கு.. தூக்கு கிடைக்க மேல்முறையீடு..! சென்னை போலீஸ் தகவல்
சென்னை அயனாவரத்தில் சிறுமி பலாத்கார வழக்கில் 15 குற்றவாளிகளுக்கும், தூக்கு தண்டனை கேட்டு மேல் முறையீடு செய்ய இருப்பதாக காவல் துணை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் மாற்றுதிறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 15 குற்றவாளிகளில் 4 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ஒரு வருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 வருட சிறை, 9 பேருக்கு 5 வருட சிறை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனின் உத்தரவின் பேரில் வழக்கை சிறப்பாக கையாண்ட துணை ஆணையர் ராஜேந்திரன், வழக்கு குறித்து சில முக்கிய தகவல்களை தெரிவித்தார்.
300 பக்க விசாரணை அறிக்கையில் 81 சாட்சிகள் இடம்பெற்று இருந்ததாகவும், ஒருவர் கூட நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியாகவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் இது தொடர்பான தீர்ப்பு நகல் கிடைக்கப்பெற்றதும், 15 வது குற்றவாளி குணசேகரன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்தும், ரவிக்குமார், சுரேஷ், அபிசேக், பழனி ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க கோரியும் ஆலோசனை பெற்று மேல் முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்த துணை காவல் ஆணையர் ராஜேந்திரன், பெண் பிள்ளைகளை பெற்றோர் கவனமுடன் வளர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
போக்சோ வழக்கின் இந்த தீர்ப்பு சென்னை காவல்துறை வரலாற்றில் மற்றும் ஒரு மைல்கல்..! என்றால் அது மிகையல்ல.
Comments