CAA-க்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் அரசியல் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டங்கள் அரசியல் பின்புலத்தில் வடிவமைக்கப்பட்டவை என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லியில் வரும் 8 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கர்கர்டோமா என்ற இடத்தில் நடந்த பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ஜாமியா, ஷாஹீன் பாக், சீலாம்பூர் உள்ளிட்ட இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்கள் தற்செயலாக நடந்ததவையா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
நாட்டில் நல்லிணக்கத்தை அழிக்கும்பொருட்டு ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட போராட்டங்கள் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
பாஜகவுக்கு மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கே இந்த அராஜகங்களை தடுக்கும் அதிகாரம் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். டெல்லி மக்களின் வாக்குதான் நாட்டில் மாற்றம் ஏற்பட காரணமாக இருந்தது என்றும்.
தற்போது டெல்லி மக்கள் அளிக்கபோகும் வாக்குதான் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானித்து டெல்லியை நவீனமாக்கப் போகிறது என்றும் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசினார்.
நடுத்தர குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு, வரி செலுத்வோர் பணத்தை சேமிக்கும் வகையில் வருமான வரிவிகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். வரி சேமிப்புக்காக எந்த திட்டத்திலும் முதலீடு செய்ய வேண்டிய அழுத்தம், புதிய முறையில் இல்லை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Comments