எப்போதும் இந்தியாவின் சிறந்த கேப்டன் இவர் தான்.. ரோஹித் சர்மா புகழாரம்

0 2170

இந்திய கிரிக்கெட் அணி இதுவரை பார்த்ததிலேயே சிறந்த கேப்டன் தோனி தான், என அதிரடி துவக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு மூன்று வகை ஐசிசி கோப்பைகளை பெற்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்குரியவர் தோனி. 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011-ல் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை, 2013-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. மேலும் தோனி தலைமையில் பெரும் எழுச்சி கண்ட இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் புதிய பரிணாமத்தில் ஜொலித்தது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின்னர் எந்த சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். மேலும் சமீபத்தில் வெளியிடப்பட்ட வீரர்களின் ஒப்பந்த பட்டியலிலும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்தது.

சர்வதேச போட்டிகளில் நீல நிற ஜெர்சியில் இனி தோனியை பார்க்க முடியாதா என்று ஏங்கி தவிக்கின்றனர் ரசிகர்கள். எனினும் வர உள்ள ஐபில் தொடரில் பங்கேற்று, அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆண்டு இறுதியில் நடக்க உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பார் தோனி என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே பேட்டி ஒன்றில் பேசிய இந்திய அணியின் ஹிட்மேன் என்றழைக்கப்படும் ரோஹித், இந்திய அணி இதுவரை கண்டதில் சிறந்த கேப்டன் தோனி தான். அவர் எப்படிப்பட்டவர் என்பது முழு இந்தியாவிற்கும் தெரியும். அவர் ஒரு கூல் கேப்டன். அவரின் அமைதியான குணத்தால் தான், கடினமான நேரங்களிலும் கூட மைதானத்தில் மிக சிறந்த முடிவுகளை எடுத்துள்ளார்.

அவரின் நிதான குணத்தால் தான் தற்போது இந்திய அணி கண்ட வெற்றிகரமான மற்றும் சிறந்த கேப்டன் என்ற நிலையில் அவர் உள்ளார். தோனியின் இந்த பண்புகள் தான், ஐசிசி-யின் மூன்று கோப்பைகள் மற்றும் ஐபில் தொடரில் சென்னை சூப்பர கிங்ஸ் பெற்றுள்ள வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தது.

இளம் வீரர்கள் பதற்றத்தில் இருந்தாலும், அவர்களை மிக நேர்த்தியாக கையாண்டு அவர்களின் கழுத்தில் கை போட்டு சகஜமாக பேசுவார். அணியின் மூத்த வீரர் மற்றும் கேப்டன் இவ்வளவு கூலாக தன்னிடம் பேசும் போதே இளம் வீரர்கள் தானாகவே புத்துணர்ச்சி பெற்று கொள்வார்கள். அவரின் இத்தகைய தனித்தன்மை மிக்க குணங்களே இந்தியாவின் சிறந்த கேப்டனாக தோனியை அடையாளம் காட்டியுள்ளது என பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், கோலி தலைமையிலான அணியில் விளையாடி வரும் ரோகித் ஷர்மாவின் இந்த கருத்தால் மீண்டும் இருவருக்குமான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் பிரியர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments