குரூப் 2ஏ முறைகேடு - மேலும் 4 பேர் கைது

0 1197

டிஎன்பிஎஸ்சி குரூப் - 2ஏ முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பணம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்ற 3 பேர் உட்பட மேலும் 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

முறைகேட்டில் முக்கிய நபர்களான இடைத்தரகர் ஜெயக்குமாரும், முதல் நிலை காவலர் சித்தாண்டியும் தலைமறைவாக உள்ள நிலையில், தனிப்படை அமைத்து அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் முக்கியக் குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் 15 லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்று காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் தாமல் கிராமத்தை சேர்ந்த வடிவு, சென்னை பட்டினப்பாக்கத்திலுள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் பெரிய காஞ்சிபுரம் சர்வதீர்த்த கரையை சேர்ந்த ஞானசம்பந்தம், செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் காஞ்சிபுரம் வெள்ளிங்கப்பட்டறையை சேர்ந்த ஆனந்தன் ஆகிய மூவரையும்  சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் சென்னை எழிலகத்தில் உதவியாளராக பணிபுரியும் மனைவிக்காக காவலர் சித்தாண்டி மூலம் ஜெயக்குமாரிடம் 8 லட்ச ரூபாய் பணம் கொடுத்த மற்றொரு காவலரான திருநெல்வேலி மாவட்டம் விஜயபதியை சேர்ந்த முத்துக்குமாரையும் கைது செய்துள்ளனர்.

இதனிடையே குரூப் - 2 ஏ முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள், மொத்தமுள்ள 200 வினாக்களில் 20 வினாக்களுக்கு மட்டுமே விடையளித்து விட்டு வந்ததாகவும், மீதமுள்ள விடைகளை ராமேசுவரத்திலிருந்து கொண்டு வரும் வழியில் விடைத்தாள்களை கைப்பற்றி இடைத்தரகர்களே நிரப்பி மீண்டும் வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரத்தில், தேடப்படும் முக்கிய நபரான, இடைத்தரகர் ஜெயக்குமாரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, புரோக்கர் ஜெயக்குமார், வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை முடக்கி வைத்திருக்கும் சிபிசிஐடி போலீசார், தற்போது, வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர்.

இதன்மூலம், ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதால், எந்நேரத்திலும், சிபிசிஐடி போலீசாரிடம் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments