சர்வதேச பொருளாதாரத்தையும் அச்சுறுத்தும் கொரோனா..!
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு, சீனாவில் இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தாக்குதலால் சர்வதேச பொருளாதாரத்திலும் ஓரளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பயண தடைகள்:
உயிர்கொல்லி வைரஸான கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில், பல்வேறு நாடுகள் பயண தடைகள் விதித்துள்ளன. சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறும், ஒரு சில நாடுகள் சீன மக்கள் தங்கள் நாடுகளில் நுழைவதற்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட பலநாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
பாதிப்புகள்:
பயணத்தடைகள் மற்றும் சீனாவில் உள்ள சர்வதேச வணிக நிறுவனங்கள் சிலவற்றின் தற்காலிக மூடல் பொருளாதாரத்தை பாதித்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். பன்னாட்டு போக்குவரத்திற்கு உதவும் விமானங்கள், கப்பல்கள், ரயில்கள் உள்ளிட்டவற்றை முடக்கி வைக்கும் போது அது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுற்றுலா வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.
சுற்றுலா வருமானம் சரிவு:
சீன பயணிகள் சுற்றுலா சென்றால் பிற நாடுகளில் நீண்ட காலம் தங்குவதற்கும், அதிக செலவு செய்வதற்கும் முனைகிறார்கள். சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தக போர் காரணமாக, அமெரிக்காவில் சீன நாட்டினரால் கிடைத்து வந்த சுற்றுலா வருமானத்தில் சரிவு ஏற்பட்டது.
வருமான இழப்பு:
கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில், சீன நாட்டினருக்கு விதிக்கப்பட்டுள்ள பயண தடைகளால் ஆசியா, ஐரோப்பா தற்போது சுற்றுலா வருமான இழப்பை சந்திக்கும். சீன சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சில்லறை வர்த்தகங்கள், உணவகங்கள், ஆடம்பர பொருட்கள் மற்றும் அனைத்து வகையான சேவைகளிலும் பாதிப்பு ஏற்படுத்தும். இந்த பாதிப்பு பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
விமான சேவை குறைப்பு:
கொரோனா பரவுவதை தடுக்க சில விமான நிறுவனங்கள் சீனாவிற்கு செல்லும் விமானங்களை ரத்து செய்தும் குறைத்தும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் விதித்த பயண தடைகள் காரணமாக வணிகம் சார்ந்த பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வணிக நிறுவனங்கள் மூடல்:
சீனாவில் உள்ள தனது கிளைகளை ஆப்பிள் நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது. மேலும் Starbucks, McDonald’s உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களும் சீனாவில் உள்ள தங்களது கிளைகளை மூடியுள்ளன. இதனால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. விமான நிறுவனங்கள் உட்பட பலவும் தங்கள் ஊழியர்களைப் பாதுகாக்க முயற்சிக்கின்றன. இதனால் சீனாவின் முக்கிய வருமானமான வர்த்தக துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
கச்சா எண்ணெயால் தாக்கம்:
சீனாவில் எரிபொருள் தேவை குறிப்பாக விமான எரிபொருள் தேவை மிகவும் குறைந்துள்ளது. அதே போல கச்சா எண்ணெயின் தேவையும், விலையும் குறைந்துள்ளன. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை இறக்கம் கண்டுள்ளது. இடையில் அமெரிக்கா - ஈரான் மோதல் காரணமாக கிடு கிடுவென ஏறிய கச்சா எண்ணெய் விலை, தற்போது சிறிது சிறிதாக குறைய துவங்கியுள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் வருமானம் குறையும். இதன் தாக்கம் சர்வதேச பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Comments