அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு - தண்டனை அறிவிப்பு..!

0 2911

சென்னையில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம், அவர்களில் 4 பேரை சாகும் வரை சிறையில் அடைக்கவும் தீர்ப்பளித்தது. 

சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த சுமார் 12 வயதுச் சிறுமி 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்தக் குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக இருந்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்ளிட்ட 17 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசுத் தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். மேலும் காவல்துறை தரப்பில்120 வழக்கு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

குற்றம்சாட்டப்பட்டவர்களில், 10 ஆவது நபரான பாபு என்பவர் விசாரணை காலத்தில் இறந்து விட்டார்.

இந்த 17 பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழும், பாலியல் குற்றங்களில் இருந்து சிறாரை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் கடந்த 1 ஆம் தேதி தீர்ப்பளித்த சிறப்பு நீதின்ற நீதிபதி மஞ்சுளா, குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குணசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் நிரூபிக்கபடாததால், அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில், குற்றவாளிகள் 15 பேருக்கான தண்டனை விபரங்களை பிற்பகல் சுமார் 3 மணி அளவில் அறிவித்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளான ரவிகுமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், அவர்கள் 4 பேரும் மரணமடையும் வரை சிறையில் இருக்க வேண்டும் எனவும், ராஜசேகர் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்தார்.

நான்காவது குற்றவாளியான எரால்பிராஸ் என்பவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி, மற்ற குற்றவாளிகளான சுகுமாரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், தீனதயாளன், ராஜா, சூர்யா, ஜெயராமன், உமாபதி ஆகிய 9 குற்றவாளிகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தார்.

தமிழக அரசின் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு நிதியத்திலிருந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடைக்கால நிவாரணமாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றவாளிகள் 15 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments