கேரளாவில் 3வது நபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி

0 1627

கேரளாவில் 3ஆவதாக ஒரு நபருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க தனி குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 

இந்தியாவில் முதல் கொரானா வைரஸ் பாதிப்பு கேரளத்தில்தான் உறுதிசெய்யப்பட்டது. கொரானா வைரஸ் உருவானதாகக் கருதப்படும் சீனாவின் வூகான் நகரில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரானா தொற்று கடந்த 30ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டு திருச்சூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரண்டாவதாக ஒருவருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது ஞாயிறன்று உறுதிசெய்யப்பட்டு, அவர் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மூன்றாவதாக ஒரு நபருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வூகானில் இருந்து திரும்பிய அந்த மருத்துவ மாணவர், தற்போது, காசர்கோடு மாவட்டத்தில் காஞ்சாங்காடு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரளாவில் 3 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளில் மேலும் 75 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, சீனாவில் இருந்து திரும்பிய 1924 பேர் கேரளாவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

கொரானா வைரஸ் பாதித்த 3 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்தார். கண்காணிப்பில் இருப்பவர்கள் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்காமல் வெளியே செல்லக்கூடாது என்றும், குடும்பங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் இருந்தால் அவற்றை தள்ளிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க, தனி குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. சுகாதாரம், உள்துறை, பெண்கள், குழந்தைகள் நலம், மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சக பிரதிநிதிகள் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

இந்த நிலையில் சீனாவுக்கு செல்வதை மக்கள் தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது. கடந்த ஜனவரி 15 ஆம் தேதி முதல் யாரேனும் சீனா சென்று திரும்பியிருந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments