தமிழகத்தில் கொரோனா அறிகுறி..!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு மருத்துவமனைகளில் 6 பேர் கொரோனா அறிகுறியுடன் தனிவார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டு, சீனாவில் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் திரும்பி வருவோர் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலுள்ள விமான நிலையங்களிலும் மருத்துவ குழுக்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த பரிசோதனையின் அடிப்படையில், சீனாவிலிருந்து வந்த பெண் மருத்துவர் உள்ளிட்ட 2 பெண்களும், 47 வயதான சீன நாட்டவர் ஒருவரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிவார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேபோல், சிங்கப்பூரிலிருந்து திருச்சி திரும்பிய 27 வயது இளைஞர் ஒருவரும், கொரானா வைரஸ் அறிகுறியுடன் அங்குள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனிவார்டில் கண்காணிக்கப்பட்டு வருகிறார். இதுகுறித்து பேசிய திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா, இளைஞருக்கு மூச்சுத் திணறல் போன்ற அறிகுறி எதுவும் இல்லையென்ற போதிலும், தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே, சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய 799 பேருக்கு இதுவரை 4 விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுடைய வீட்டிலேயே மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் மொத்தம் 6 பேர் தனிமைப்படுத்தப் பட்ட பிரத்தியேக வார்டில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனரகம், அந்த 6 பேரில் 3 பேர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், எஞ்சிய 3 பேர் திருச்சி, திருவண்ணாமலை, ராமநாதபுரம் அருகேவுள்ள அரசு மருத்துவமனையில் தலா ஒருவர் வீதம் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Comments