குரூப் 2ஏ தேர்வு முறைகேடு.. 2 அரசு ஊழியர்கள் சிறையில் அடைப்பு...
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ முறைகேடு வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர்கள் 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது அரசுப் பணிகளில் உள்ளனர். இந்நிலையில் குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 16 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து, விசாரணை செய்தனர். அப்போது குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. அளித்த புகாரின் பேரில், 42 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர். இவர்கள் அனைவரும் ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதி குரூப்-2 ஏ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்.
குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வரும் ஆயுதப்படை காவலரான சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணூரைச் சேர்ந்த சித்தாண்டிதான், குரூப்- 2 ஏ தேர்வு முறைகேட்டிலும் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
குரூப்- 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதற்கு தேர்வர்களிடம் 13 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றிருப்பதையும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தனர். காரைக்குடிமாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் தனது சகோதரரான வேல்முருகன் என்பவரையும், இந்த தேர்வை எழுத எழுத வைத்து சித்தாண்டி முறைகேடாக தேர்ச்சி பெற வைத்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சித்தாண்டியிடம் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்று நெல்லை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தின் உதவியாளராகப் பணிபுரியும் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஜெயராணி என்பவரும் பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரிடமும் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது. இதில் முறைகேடு தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வேல்முருகனையும், ஜெயராணியையும் போலீசார் கைது செய்தனர். இருவரையும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி குடியிருப்பில் எழும்பூர் குற்றவியல் நீதிபதி ராஜகுமார் முன்பு நள்ளிரவில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர் இதையடுத்து நீதிபதி இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சித்தாண்டி மீது ஏற்கெனவே குரூப்- 4 தேர்வு முறைகேடு வழக்கும் உள்ளது. இதனால் இரு வழக்குகளிலும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சித்தாண்டி உள்ளிட்ட சில இடைத்தரகர்கள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே குரூப்-2ஏ முறைகேடு தொடர்பாக மேலும் இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் சுதாராணி மற்றும் சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளராக பணி புரியும் விக்னேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments