BSNL -லில் ஊழியர் குறைப்பால் தள்ளாடும் சேவை..!
பி.எஸ்.என்.எல்லில் (BSNL) பாதிக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வில் போய் விட்டதால், தமிழகத்தில் அதன் சேவைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சுய விருப்ப ஓய்வுத் திட்டத்தால் அரசுக்கு தலை கிறங்கும் அளவுக்கு செலவு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
நஷ்டத்தில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல்.லில் 50 வயதை அடைந்த ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதற்கு, இந்தியா முழுதும் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் ஊழியர்களில் 78 ஆயிரத்து 500 ஆயிரம் பேர் விண்ணப்பித்து நேற்று ஓய்வு பெற்றனர்.
ஒவ்வொரு ஊழியருக்கும் எஞ்சியுள்ள பணிக்காலத்தில், வருடாந்திர சம்பளத்தின் 10 மடங்கு தொகை சுய விருப்ப ஓய்வு சலுகையாக வழங்கப்படுகிறது. இதன்படி 10 ஆண்டு பணிக்காலம் பாக்கியுள்ள, மாத ஊதியம் 75 ஆயிரம் ரூபாய் பெறும் ஒரு ஊழியருக்கு சுமார் 90 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
அதிக ஊதியம் பெறும் அதிகாரிகளுக்கு இது அதை விடவும் பலமடங்கு அதிகமாக இருக்கும். இதனால் அரசுக்கு மொத்தம் 17 ஆயிரத்து 169 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இது தவிர ஊழியர்களுக்கு வழக்கமான பணிநிறைவு சலுகைகளையும் வழங்க வேண்டும் என்பதால் மேலும் பல கோடிகள் அரசு கஜானாவில் இருந்து காலியாகும் என்பது உறுதி.
இதனிடையே, சென்னை பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு கோட்டத்தில் பணியாற்றும் 5 ஆயிரத்து 500 பேரில் 2 ஆயிரத்து 700 பேர் நேற்று விருப்ப ஓய்வு பெற்றனர். அதே போன்று தமிழ்நாடு தொலைத் தொடர்பு கோட்டத்தில் உள்ள 10 ஆயிரம் ஊழியர்களில் 5 ஆயிரத்து 300 பேர் ஓய்வு பெற்று விட்டனர்.
எஞ்சியுள்ள 4 ஆயிரத்து 700 பேரை வைத்து, சேவை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு பி.எஸ்.என்.எல். தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் ஒன்றேகால் கோடி மொபைல் இணைப்புகள், 14 லட்சம் தரைவழி இணைப்புகள், 6 லட்சம் பிராட்பேண்ட் இணைப்புகளை வைத்துள்ள பிஎஸ் என் எல் இவற்றை இனி எப்படி சமாளிக்கப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.
Comments