15 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு...

0 2452

15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு  இருப்பதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

2020-2021ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சமுதாயத்தின் மீது அக்கறை செலுத்துதல் ஆகியவையே பட்ஜெட்டின் 3 நோக்கங்கள் என்று அவர் கூறினார்.

ஜிஎஸ்டி அமலான பிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 4 சதவீதம் அளவிற்கு அன்றாட செலவு குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மூலமாக சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மக்களுக்கு பணப்பலன் கிடைத்துள்ளது என்றும், வரி செலுத்துவோர் பட்டியலில் புதிதாக சுமார் 16 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் வருமானத்தை 2 மடங்காக்க தொடர்ந்து மத்திய அரசு பணியாற்றும் என்றும், வேளாண் சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும், 20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமி திருத்தி உண் எனும் ஔவையாரின் ஆத்திச் சூடியை சுட்டிக்காட்டி, அதை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டார்.

விவசாயிகள் பலன் பெற கிராம அளவில் விவசாய பொருட்கள் சேமிப்பகம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும், கிராமப்புற பெண்களுக்காக தானிய லட்சுமி எனும் புதிய திட்டம் கொண்டு வரப்படும்,  விளைபொருட்களை எளிதாக விநியோகிக்க தனியார் பங்களிப்புடன் குளிர்சாதன வசதியுடன் தனி ரயில் அறிமுகப்படுத்தப்படும், விமான போக்குவரத்து துறை மூலமாக கிருஷி உடான் எனும் திட்டம் அமல்படுத்தப்படும் எனவும், இதன் மூலம் விவசாயிகளின் விளை பொருட்கள் ஏற்றுமதி எளிமைப்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும்,  2021ம் ஆண்டுக்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு பால் உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும்,  இதேபோல் 2022-2023க்குள் 200 லட்சம் டன் அளவிற்கு மீன் உணவுகள் சார்ந்த உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், விவசாயிகளுக்கு கிசான் கிரடிட் கார்ட் வழங்கும் திட்டம்  செயல்படுத்தப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments