வருமான வரி முறையில் இனிப்பான மாற்றம்...

0 8777

தனிநபர் வருமான வரி விகிதம் குறைக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கு 5 லட்சம் முதல் ஏழரை லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கான வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.  

தனிநபர் வருமான வரி விதிப்பு முறை முற்றாக மாற்றியமைக்கப்படுவதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, வருமான வரி விகிதங்கள் கணிசமாகக் குறைக்கபட்டுள்ளன.

5 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை. 5 லட்ச ரூபாய் முதல் ஏழரை லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி, 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஏழரை லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்தில் இருந்து 12.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி, 30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

12.5 லட்சத்தில் இருந்து 15 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 15 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள தனிநபர்களுக்கு வருமான வரி 30 சதவீதமாக நீடிக்கும்.

தனிநபர் வருமான வரி முறையை எளிதாக்கும் வகையில், 70 வகையான வருமான வரி கழிவுகள் நீக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 100 வகையான கழிவுகள் இருந்த நிலையில், அதில் 70 வகையான கழிவுகள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட புதிய வருமான வரி முறையை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. அது வரி செலுத்துபவர்களின் விருப்பத்தை பொறுத்ததாகும். இந்த புதிய முறைக்கு மாறுபவர்கள், பழைய முறையில் உள்ள வரிக் கழிவுகள் மற்றும் சலுகைகளை பயன்படுத்த முடியாது. இதற்கேற்ப, 70 வகையான வரிக் கழிவுகள் மற்றும் சலுகைகள் நீக்கப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

பல்வேறு வகையான வரிக் கழிவு முறைகள் இருக்கும்போது வரித்துறை அதிகாரிகளுக்கு பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு, வரி செலுத்துபவர்கள் வல்லுநர்களின் உதவியை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 

எனவேதான் புதிய முறையில் வரிக் கழிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இது வேண்டாம் என நினைப்பவர்கள் பழைய முறையிலேயே வரிக் கழிவுகள் மற்றும் சலுகைகள் பயன்படுத்தி வருமான வரி செலுத்தலாம் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

புதிய முறையை தேர்ந்தெடுக்கும்போது, 15 லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டுக்கு 15 லட்ச ரூபாய் வரை ஈட்டுபவர், புதிய முறையின் கீழ் 1.95 லட்ச ரூபாய் வரி செலுத்த வேண்டும். முன்னர் இது 2.73 லட்ச ரூபாயாக இருந்த நிலையில், 78 ஆயிரம் ரூபாய் மிச்சமாகிறது. அதேசமயம், புதிய முறையில் அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும். அந்த பணம் வரிசெலுத்துபவர்கள் கையில் தங்கி, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என மத்திய அரசு கருதுகிறது.

புதிய முறையில் வருமான வரி செலுத்துபவர்கள் எந்தெந்த வரிக் கழிவுகளை பயன்படுத்த முடியாது என்பதைப் பார்க்கலாம்...

ஏற்கெனவே உள்ள வரிக் கழிவுகள் மற்றும் சலுகைகளில் பெரும்பாலானவற்றை புதிய முறையில் பயன்படுத்த முடியாது. மிக முக்கியமாக பிஎஃப், என்பிஎஸ், ஆயுள் காப்பீட்டு பிரீமியம், பிள்ளைகளின் படிப்புக்கான டியூசன் பீஸ் ஆகியவற்றிற்கான செக்சன் 80C, மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்திற்கான 80D, வீட்டுக் கடனுக்கான வட்டி மற்றும் ஹெச்ஆர்ஏ ஆகியவற்றின் மீதான வரிச் சலுகைகளை பயன்படுத்த முடியாது.

அறக்கட்டளை நன்கொடைகள் மீதான வரிக் கழிவு வழங்கும் 80G பிரிவை பயன்படுத்த முடியாது. Standard deduction எனப்படும் 50 ஆயிரம் ரூபாய் நிலையான கழிவும் கிடைக்காது. 80DD and 80DDB பிரிவுகளின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான வரி சலுகைகளை பயன்படுத்த முடியாது. 80E பிரிவின் கீழ் கல்விக் கடனுக்கு செலுத்திய வட்டிக்கும் வரிச் சலுகை கோர முடியாது.

சுருக்கமாக சொன்னால் வருமான வரி சட்டத்தின் பகுதி 6ஏ-ல் உள்ள எந்த பிரிவையும் பயன்படுத்தி வரிச் சலுகை மற்றும் வரிக் கழிவு கோர முடியாது. எனவே, புதிய வரி முறையால் பணம் மிச்சமாகுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments